×

மேல்மருவத்தூர் ஊராட்சியில் ‘நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏ’ நிகழ்ச்சி: பாபு எம்எல்ஏ பங்கேற்பு

மதுராந்தகம்: சித்தாமூர் ஒன்றியத்தில் நடைபெற்ற ‘நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏ’ நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. சித்தாமூர் ஒன்றியம் மேல்மருவத்தூர் ஊராட்சியில், ‘நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏ’ சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகித்தார்.
ஊராட்சி மன்ற துணை தலைவர் அகத்தியன் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், முதியோர், விவசாயிகள் கலந்துக்கொண்டு, பல ஆண்டுகளாக தங்களுக்கு தீர்வு காணப்படாத வீட்டுமனை பட்டா மாறுதல், பட்டா திருத்தங்கள், புதிய வீடுகள் கட்டுதல், முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபுவிடம் வழங்கினர்.

இதேபோன்று, பொலம்பாக்கம், சித்தாமூர், பெருங்கரணை, முகுந்தகிரி, பேரம்பாக்கம், மழுவங்காரணை, பொறையூர், கீழ்மருவத்தூர், சோத்துப்பாக்கம், தண்டலம், பருக்கள், புத்தூர், பூங்குணம், சின்ன கயப்பாக்கம், பெரிய கயப்பாக்கம், இந்தளூர் ஆகிய ஊராட்சிகளில் சிறப்பு பட்டா வழங்குவதற்கு மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டா, அரசு உதவித்தொகை உள்ளிட்ட மனுக்களை செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபுவிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சிகளில், சித்தாமூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை, கோட்டாட்சியர் தியாகராஜன், தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் சிற்றரசு, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் நிர்மல் குமார், தெற்கு மாவட்ட செயலாளர் தமிழினி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதவன், ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன், மாவட்ட கவுன்சிலர் டைகர்குணா, பொலம்பாக்கம் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார், சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா மதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மேல்மருவத்தூர் ஊராட்சியில் ‘நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏ’ நிகழ்ச்சி: பாபு எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Melmaruvathur ,Babu ,Madhurantagam ,Chittamur Union.… ,Dinakaran ,
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி