×

எல்லை பிரச்னை காரணமாக மரகத பூஞ்சோலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே கிராம எல்லை பிரச்னை காரணமாக மரகத பூஞ்சோலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில், தமிழக அரசு வனத்துறை சார்பாக மரகத பூஞ்சோலை அமைக்கும் நிகழ்ச்சி கடந்த 16ம் தேதி அடிக்கல் நாட்டி துவக்கப்பட்டது. இந்த மரகத பூஞ்சோலை அமைய உள்ள 2.5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தின் பெரும்பகுதி கடமலைப்புத்தூர் ஊராட்சி எல்லைக்குட்பட்டது எனவும், எனவே எங்கள் ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தில் பெரும்பேர் கண்டிகை ஊராட்சியின் மூலம் மரகத பூஞ்சோலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என கடமலைபுத்தூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

எனவே, பெரும்பேர் கண்டிகை, கடமலை புத்தூர் ஊராட்சி மக்களை கடந்த 15ம் தேதி அழைத்து, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அமைதி பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, கடமலைபுத்தூர் ஊராட்சி மக்கள் தற்போது அமைய உள்ள மரகத பூஞ்சோலைக்காண நிலப்பரப்பில் பெருமளவு நிலம் தங்கள் ஊராட்சிக்கு உட்பட்டது என்பதால் அந்த மரகத பூஞ்சோலை அமைக்கும் திட்டத்தை கடமலை புத்தூர் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அப்போது, இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தான் முடிவு எடுக்க வேண்டும் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பூஞ்சோலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டதை எதிர்த்து கடமலைபுத்தூர் ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரை சந்தித்து இந்த பிரச்னை குறித்து மனு அளித்தனர். மேலும், அந்த குறிப்பிட்ட இடத்தில் தங்கள் ஊராட்சிக்கான பள்ளி கட்டிடம் கட்ட இருப்பதாகவும், எனவே அங்கு மரகத பூஞ்சோலை அமைக்க கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர்.

The post எல்லை பிரச்னை காரணமாக மரகத பூஞ்சோலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Maragatha Pooncholi ,Madhurantagam ,Maratha Pooncholi ,Achirupakkam ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...