×

நீர் சேமிப்பு உள்பட மக்களுக்கு மோடியின் 9 வேண்டுகோள்: ரூ.19,000 கோடிக்கு நலத்திட்டங்கள்

வாரணாசி: நீரை சேமிப்பது மற்றும் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்பட பிரதமர் மோடி மக்களுக்கு 9 வேண்டுகோள்களை முன் வைத்துள்ளார். உத்தர பிரதேசத்தில் தனது தொகுதியான வாரணாசியில் உள்ள உமாரஹாவில் ஸ்வர்வேத் மகாமந்திரை திறந்து வைத்து பேசிய பிரதமர், மக்களுக்கு 9 வேண்டுகோள்களை முன்வைத்தார். முதலாவதாக, நீரை சேமிப்பது மற்றும் நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இரண்டாவதாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மூன்றாவதாக கிராமங்கள், வட்டாரங்கள் மற்றும் நகரங்களில் தூய்மை முயற்சிகளை அதிகரிப்பது,

நான்காவதாக உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவித்தல் மற்றும் பயன்படுத்துதல், ஐந்தாவதாக பயணம் மற்றும் உள்நாட்டை முழுமையாக அறிந்து கொள்ளுதல், ஆறாவதாக விவசாயிகளிடையே இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது, ஏழாவதாக ஊக்குவிக்கும் வகையில் அன்றாட வாழ்வில் சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ளுதல், எட்டாவதாக விளையாட்டு, உடற்பயிற்சி அல்லது யோகாவை வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுதல், ஒன்பதாவதாக நாட்டில் வறுமையை வேரறுக்கக் குறைந்தபட்சம் ஒரு ஏழை குடும்பத்திற்கு ஆதரவளித்தல் ஆகியவையாகும்.

அதன் பின்னர், ரூ.19 ஆயிரம் கோடிக்கான நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அவர்,” மோடியின் உத்தரவாத வாகனத்துக்கு மக்களிடையே பெருமளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. மோடியின் உத்தரவாத வாகனம் தற்போது நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைகிறது. இது 2047ம் ஆண்டிற்குள் நாடு வளர்ச்சி அடைவதை உறுதிபடுத்துகிறது,” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், “அடிமை தளையில் இருந்த போது ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவை பலவீனப்படுத்தும் முயற்சியாக நமது கலாசார சின்னங்களை குறிவைத்து தாக்கினர். இதனால் நமது பாரம்பரியத்தை நினைத்து பெருமைப்படுவதை மறந்து விட்டு நாடு தாழ்வு மனப்பான்மையில் மூழ்கியது. சுதந்திரத்துக்கு பிறகு அவற்றை மறுகட்டமைக்க வேண்டியது அவசியமானது. காலத்தின் சக்கரங்கள் இன்று மீண்டும் திரும்பியுள்ளன. இந்தியா அதன் பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்வதுடன், அடிமை மனப்பான்மையிலிருந்து விடுதலையைப் பிரகடனப்படுத்துகிறது,” என்று கூறினார்.

* ஏஐ தொழில்நுட்பம்
காசி தமிழ் சங்கமத்தை நேற்று முன்தினம் தொடங்கி வைத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து சென்றுள்ள 1,400 தமிழர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி ”தனது இந்தி மொழி உரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இது எனது முதல் அனுபவம். இனிமேல் இதனை பயன்படுத்தி மக்களை எளிதில் சென்றடைய முடியும். இதில் நான் கேட்கும் கேள்விகளுக்கு மக்கள் பதில் அளிக்கலாம்,” என்று கூறினார்.

The post நீர் சேமிப்பு உள்பட மக்களுக்கு மோடியின் 9 வேண்டுகோள்: ரூ.19,000 கோடிக்கு நலத்திட்டங்கள் appeared first on Dinakaran.

Tags : Modi ,Varanasi ,
× RELATED வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து...