×

சார்-பதிவாளர் அலுவலகத்தில் நில உரிமையாளர் முட்டி போட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் 3.16 ஏக்கர் நிலத்தை 40 ஆண்டுகளாக மூன்று குடும்பத்தினர் விவசாயம் செய்த நிலையில், போலி ஆவணங்களை வைத்து சிலர் பட்டா மாற்றம் செய்வதை கண்டித்து நிலத்திற்கு சொந்தக்காரர்கள் கும்மிடிப்பூண்டி சார்-பதிவாளர் அலுவலகத்தில் முட்டி போட்டு தங்கள் நிலத்தை மீட்டு தர நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் 1985ம் ஆண்டு குப்புரெட்டி என்பவரிடமிருந்து கிருஷ்டா ரெட்டி, விவேகானந்தன், குப்பன் ஆகியோர் 3.16 ஏக்கர் நிலத்தை பணம் தந்து வாங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 40 ஆண்டுகளாக அவர்களும் அவர்களது வாரிசுகளும் விவசாயம் பார்த்து வந்தனர்.

இந்நிலையில், இவர்களுக்கு மேற்கண்ட நிலத்தை விற்ற குப்பு ரெட்டியின் தங்கை செல்லாமாவின் பேரன் பேத்திகளான ஆந்திர மாநிலம் சித்துரமண்டலம் நகரி அடுத்த நாகராஜு குப்பத்தை சேர்ந்த சாலம்மா, முருகையா, சித்தம்மா, வரதையா, தேவதாஸ், கிருஷ்ணய்யா ஆகிய 6 பேர் குப்பு ரெட்டி இறந்து 39 வருடங்களுக்கு கழித்து போலியான வாரிசு சான்றிதழ் தயாரித்தனர். மேலும், போலி பத்திரம் தயார் செய்து இந்த நிலத்திற்கு பட்டா வாங்க முயன்றனர். இது குறித்த அறிந்த நிலத்துக்கு சொந்தக்காரர்களின் வாரிசுகள் கும்மிடிப்பூண்டி பத்திரபதிவு அலுவலகத்தில் தாங்களே நிலத்திற்கு சொந்தக்காரர்கள், காலம் சென்ற குப்பு ரெட்டிக்கு வாரிசுகளே இல்லாத நிலையில், இத்தனை வருடங்களுக்கு கழித்து போலி ஆவணங்களை தந்து பட்டா மாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர்.

அதற்கு கும்மிடிப்பூண்டி பத்திரபதிவு அலுவலக சார் – பதிவாளர் இன்றைக்குள், வட்டாட்சியரிடம் தடை சான்றிதழ் பெற்று வராவிட்டால் பத்திர பதிவு நடைபெறும் என்று கூறினார். ஆனால், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் நேற்று விடுமுறையில் இருந்த நிலையில், நிலத்தின் உரிமையாளர்கள் கும்மிடிப்பூண்டி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் துணையோடு, பத்திரப்பதிவு நடந்து விடுமோ என்று பயத்தில் முட்டி போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு, அந்த நிலத்தை நம்பியே விவசாயம் செய்து பிழைத்து வருவதாக கூறி நிலத்தை மீட்டு தர கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், போலி ஆவணம் தயாரித்து பட்டா மாற்றம் செய்ய இருந்த 6 பேரின் சார்பாக வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு ஒருவர் ஒரு சென்ட் நிலத்திற்கு ரூ.16,000 தந்தால் எந்தப் பிரசனையின்றி அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொள்ளலாம் என்று வேற பேசியதாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி சார் – பதிவாளர் அலுவலகத்தில், அடிக்கடி போலி ஆவணங்களை வைத்து பத்திரப்பதிவு நடைபெறுவதும், பட்டா மாற்றம் நடைபெறுவதும் வாடிக்கையாக உள்ளது. இது போன்ற போலி பத்திர பதிவுகளை சார் -பதிவாளர் அலுவலக ஊழியர்கள், நில புரோக்கர்கள், வழக்கறிஞர்கள் என கூறிக்கொண்டு திரியும் போலி வழக்கறிஞர்கள் இணைந்து நடத்துவது கும்மிடிப்பூண்டியில் வழக்கமாக உள்ளது என பாதிக்கப்பட்ட பலர் புலம்புகின்றனர். இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி, போலி பத்திரப்பதிவில் ஈடுபடும் நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சார்-பதிவாளர் அலுவலகத்தில் நில உரிமையாளர் முட்டி போட்டு கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Char-Registrar's ,Kummidipundi ,Kannakota ,Dinakaran ,
× RELATED தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்...