×

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 2500 மோசடி கடன் செயலிகள் நீக்கம்: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: ப்ளே ஸ்டோரில் இருந்து சுமார் 2500 மோசடி கடன் செயலிகளை கூகுள் நீக்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்து மூலமாக அளித்த பதிலில்,‘‘மோசடி கடன் பயன்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட பிற கட்டுப்பாட்டாளர்கள், பங்குதாரர்களுடன் ஒன்றிய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

நிதிநிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் கூட்டங்களிலும் இந்த விவகாரம் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகின்றது. மோசடியான கடன் செயலிகளை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கியானது ஒன்றிய அரசுடன் சட்டப்பூர்வமான பயன்பாடுகள் குறித்த வெள்ளை பட்டியலை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த பட்டியலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது கடன் செயலிகளை வழங்கும் கூகுள் நிறுவனத்துடன் பகிர்ந்துள்ளது.

இதன் அடிப்படையில் ப்ளே ஸ்டோரில் கடன் வழங்கும் செயலிகளை அமலாக்குவது தொடர்பான தனது கொள்கைளை கூகுள் புதுப்பித்துள்ளது. கூகுளின் திருத்தப்பட்ட கொள்கையின்படி ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் வெளியிடப்பட்ட அல்லது அவற்றுடன் இணைந்து செயல்படும் செயலிகள் மட்டுமே ப்ளே ஸ்டோரில் அனுமதிக்கப்படும். 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022ம் ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் சுமார் 3500 முதல் 4000 கடன் செயலிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. சுமார் 2500 மோசடி கடன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 2500 மோசடி கடன் செயலிகள் நீக்கம்: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Parliament ,New Delhi ,Google ,Dinakaran ,
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...