×

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பல அரசியல் கொலைகளில் தொடர்பு: கவர்னர் ஆரிப் முகம்மது கான் குற்றச்சாட்டால் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் நடந்த பல அரசியல் கொலைகளில் முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு உண்டு என்று கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கவர்னருக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மற்றும் இக்கட்சியின் மாணவர் அமைப்பினர் ஆகியோர் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

பல்கலை.ளில் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பதவி வழங்குவதாக கூறி கடந்த சில நாட்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ, கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறது. கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த கவர்னருக்கு எதிராக பல்கலைகழக வளாகத்தில் எஸ்எப்ஐ அமைப்பினர் பேனர்கள் கட்டினர். அந்த பேனர்களை உடனடியாக அப்புறப்படுத்த போலீசுக்கு அவர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்ட போதிலும் எஸ்எப்ஐ அமைப்பினர் மீண்டும் பல்கலைக்கழக வளாகத்தில் பேனர்களை கட்டினர். இந்நிலையில் நேற்று கோழிக்கோட்டில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நிருபர்களிடம் கூறியது: கேரளா போலீஸ் இந்தியாவிலேயே தலைசிறந்ததாகும்.

ஆனால் முதல்வர் பினராயி விஜயன் இந்த சிறப்புமிக்க போலீஸ் துறையை களங்கப்படுத்தி விட்டார். அவரது உத்தரவுக்கு அடிபணிந்து தான் போலீசார் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கண்ணூர் மாவட்டத்தில் நடந்த பல அரசியல் கொலைகளில் முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு உண்டு. இவ்வாறு அவர் கூறினார். கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் கவர்னர் கலந்து கொண்டார். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் எஸ்எப்ஐ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீஸ் தடுப்பு வேலிகளைத் தாண்டி அவர்கள் பல்கலைகழகத்திற்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

The post கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பல அரசியல் கொலைகளில் தொடர்பு: கவர்னர் ஆரிப் முகம்மது கான் குற்றச்சாட்டால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Gov ,Arif Mohammed Khan ,Thiruvananthapuram ,Governor ,Kannur, Kerala ,Arif Muhammad Khan ,Dinakaran ,
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...