×

நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் குற்றவாளிகளின் பேஸ்புக், வங்கி விவரங்கள் ஆய்வு: மெட்டா உதவியை நாடிய போலீசார்

புதுடெல்லி: நாடாமன்ற பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பேஸ்புக், வாட்ஸ் அப், வங்கி கணக்கு விவரங்களை போலீசார் ஆய்வு செய்கின்றனர். இதுதொடர்பாக மெட்டா நிறுவனத்தின் உதவியை நாடி உள்ளனர். மக்களவையில் கடந்த 13ம் தேதி கலர் புகை குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் இதுவரை சாகர் சர்மா, மனோரஞ்சன், நீலம் தேவி, அமோல் ஷிண்டே, லலித் ஜா, மகேஷ் குமாவத் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்போது 6 குற்றவாளிகளின் சமூக வலைதள கணக்குகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இவர்கள் பேஸ்புக்கில் ‘பகத்சிங் ரசிகர் கிளப்’ என்ற பக்கத்தை தொடங்கி அதன் வழியாக உரையாடி உள்ளனர். பின்னர் இந்த பக்கம் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பக்கம் குறித்த விவரங்களை தருமாறு பேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்திடம் டெல்லி போலீசார் கேட்டுள்ளனர். அதோடு, குற்றவாளிகளின் வாட்ஸ் அப் தகவல்களையும் தருமாறு கேட்டுள்ளனர். மேலும், குற்றவாளிகளின் வங்கி கணக்கு விவரங்களையும் அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து போலீசார் பெற்றுள்ளனர்.

இதன் மூலம், கலர் குண்டு வீசியதற்காக ஏதேனும் அமைப்பிடம் இருந்து பணம் பெற்றுள்ளனரா என்பது குறித்து விசாரிக்க உள்ளனர். முக்கிய குற்றவாளியான லலித் ஜா அவரது செல்போனையும், மற்ற 4 குற்றவாளிகள் செல்போனையும் ராஜஸ்தானின் நாகூர் பகுதியில் வைத்து எரித்ததாக கூறி உள்ளார். அந்த இடத்தில் கிடைத்த எரிந்த செல்போன் பாகங்களை மீட்டுள்ள போலீசார் அதை தடயவியல் சோதனைக்கு அனுப்பி அதில் உள்ள தகவல்களை மீட்க வாய்ப்புள்ளதா என கேட்டுள்ளனர்.

The post நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் குற்றவாளிகளின் பேஸ்புக், வங்கி விவரங்கள் ஆய்வு: மெட்டா உதவியை நாடிய போலீசார் appeared first on Dinakaran.

Tags : Facebook ,Parliament ,Meta ,New Delhi ,WhatsApp ,Dinakaran ,
× RELATED பாலியல் புகார் வழக்கில் குண்டர் சட்ட...