×

கனமழையால் அணை நிரம்புகிறது: அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


உடுமலை: கனமழை காரணமாக அமராவதி அணை நீர்மட்டம் இன்று 84 அடியை நெருங்கியது. அணையிலிருந்து எந்நேரமும் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதே போல கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் நேரடி பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் கரூர் வரையிலான அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களில் பொதுமக்களின் குடிநீர் தேவை, கால்நடைகளின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகி வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமப்பகுதிகளில் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 194 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் 82.81 அடியாக உயர்ந்தது. அணையில் 4.047 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது 3.14 டிஎம்சிக்கு நீர் இருப்பு உள்ளது‌. இன்று மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 84 அடியை எட்டிவிடும். தற்போது 329 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 86 அடியை தாண்டினால் உபரிநீர் திறக்கப்படும். எனவே, அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அமராவதி வடிநில உட்கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தால் அமராவதி ஆற்றில் எந்நேரமும் உபரிநீர் திறந்துவிடப்படும்.

எனவே, ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம், என தெரிவித்துள்ளார். இன்று காலை வரையிலான 24 மணிநேரத்தில் பதிவான மழைஅளவு (மில்லிமீட்டரில்): அமராவதி அணை 75, உடுமலை 35, வரதராஜபுரம் 38, பெதப்பம்பட்டி 50, பூலாங்கிணறு 41, கோமங்கலம்புதூர் 45, திருமூர்த்திநகர் 56, நல்லாறு 71, உப்பாறு அணை 16. கடந்த ஆண்டு இதேநாளில் அமராவதி அணையில்இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு
உடுமலையில் இருந்து சுமார் 22 கிமீ., தொலைவில் உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக இன்று அதிகாலை அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்தது. பாதுகாப்பு கருதி, வளாகத்தில் உள்ள உண்டியல்கள் பாலிதீன் கவர்களால் நீர்புகாதபடி மூடப்பட்டன. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் யாரும் அருவி மற்றும் கோயில் பகுதிக்கு இன்று அனுமதிக்கப்படவில்லை.

The post கனமழையால் அணை நிரம்புகிறது: அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Amaravati river ,Udumalai ,Amaravati Dam ,Dinakaran ,
× RELATED அமராவதி அணையில் தண்ணீர் திறக்க அனுமதி