×

உயர் பதவி கிடைக்க நீலமணி

நீலமணி சனிக்கு உரியது. நீலமணி என்பது அலுமினியம் ஆக்சைடு ஆகும். முக்கோணப் படிக அமைப்பு கொண்டது. அறுகோணப்படிக வகையைச் (class) சார்ந்தது. இதை ஆங்கிலத்தில் `சஃபயர்’ என்று அழைப்பர். சனைச்சரன் என்றால் முடம் அல்லது நடக்க இயலாதவன் என்று பொருள். சனி கிரகம் ஒரு முறை சுற்றிவர இருபத்தி ஏழரை ஆண்டுகள் எடுக்கும். மிகவும் மெதுவாக சுற்றுவதால், சனைச்சரன் என்பது காரணப் பெயர் ஆயிற்று. சனீச்வரன் என்று பெயர் மாற்றி அதற்கொரு புராண கதையைச் சேர்த்தது பிற்காலத்தில் நடந்ததாகும்.

பிறந்த நாள் – திருமண நாள்

மேலை நாட்டில் 45-வது திருமண நாளை கொண்டாடுகின்ற தம்பதியினர், நீலமணியைப் பரிசாக வழங்குவது மரபு. 65-ஆவது பிறந்தநாளை `நீல மணி விழா’ என்று அழைப்பார்கள். பொன்விழா, மணிவிழா போல, நீலமணி விழாவும் கொண்டாடப்படும்.

பல வண்ண நீலமணி

நீலமணி, நீல நிறம் மட்டும் அல்லாது பச்சை, மஞ்சள் கலந்தும் கிடைக்கின்றது. பச்சையாகவும், மஞ்சளாகவும் இருந்தால் அதை பார்ட்டி (பகுதி) சஃபயர் என்று அழைப்பர். நீலநிறம் அல்லாத வேறு பல வர்ணங்களிலும் நீலமணி கிடைக்கின்றது. அதனை ஃபேன்சி சஃபயர் என்பர். நல்ல பிங்க் நிறத்தில் கிடைக்கும் நீல மணிக்கு விலை அதிகம். ஆரஞ்சு நிறமும், பிங்க் நிறமும் கலந்து இருக்கும் நீலமணி ஸ்ரீலங்கா, வியட்நாம் போன்ற நாடுகளில் கிடைக்கின்றது. கிழக்கு ஆப்பிரிக்காவில் `பத்மரங்கா’ எனப்படும் தாமரை நிறத்தில் உள்ள நீலமணி கிடைத்தது.

எங்குக் கிடைக்கிறது?

ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், கம்போடியா, சீனா, கொலம்பியா, இந்தியா (ஜம்மு காஷ்மீர்), கென்யா, ஸ்ரீலங்கா, வியட்நாம் போன்ற நாடுகளில் நீலமணி கிடைக்கின்றது.

மேலைநாடுகளில் அணிவது ஏன்?

நீலமணியை நம் நாட்டில் மட்டுமல்ல, மேலைநாட்டிலும் சிறப்பு காரணங்களுக்காக அணிகின்றனர். கண் திருஷ்டியைப் போக்குவதற்காக இத்தாலியில் இதனை தாயத்தில் பதித்து அணிகின்றனர். ஸ்காட்லாந்தில் ராணி மேரி தன்னுடைய கண் வீக்கத்தை சுகப்படுத்துவதற்காக பதக்கத்தில் நீல நிறக் கல்லை பதித்திருந்தார். அந்தக் கல்லை அடிக்கடி தன் கண்களில் ஒத்திக் கொள்வார்.

உடல் நோயைத் தீர்க்குமா?

நீலமணி வைரத்துக்கு அடுத்த உறுதியான ரத்தினம் ஆகும். சனி பகவான் இடுப்புக்குக் கீழே உள்ள பகுதிகளுக்கு, குறிப்பாக எலும்புக்கு அதிபதியானவன். சனி ஜாதகத்தில் வலுவாக இல்லாத போது அடிக்கடி ‘பட்ட காலிலே படும்’. எலும்பு முறிவு, எலும்பு தேய்மானம் போன்ற சிக்கல்கள் மிகுதியாகும். இவர்கள் நீலமணி அணிவதால் நோய் விரைந்து குணமாகும். நீலமணி அணிவதால் இயற்கைப் பேரிடர், குறிப்பாக நிலநடுக்கத்திலிருந்து ஒருவர் தன்னைக் காத்துக் கொள்ளலாம்.

யார் அணியக் கூடாது?

சனிக்கு சூரிய சந்திரர் பகை கிரகங்கள் என்பதால், சிம்மம் கடகம் ராசியில் பிறந்தவர்கள் நீலமணி அணிவது கூடாது. குருவும் சனிக்குப் பகை என்பதால் மீனம், தனுசு ராசிக்காரர்கள் நீலமணி அணியக்கூடாது.

எப்படி அணியவேண்டும்?

நீலமணியை நல்ல ரத்ன சாஸ்திரம் தெரிந்தவரைத் தேடி பிடித்து, அவர்களிடம் வாங்க வேண்டும். வெள்ளி மோதிரத்தில் அல்லது பிளாட்டினம் சங்கிலியில் கோர்த்து வாங்க வேண்டும். தங்கத்தில் பதித்து அணிய கூடாது. பாம்பு விரல் என்று சொல்லும் நடு விரலில் அணிய வேண்டும். சனிக்கிழமையில் சனி ஓரையில் அணிய வேண்டும். நீலமணியை அணியும் முன்பு, “ஓம் சனைச்சராய நமஹ’’ என்ற சனிக்குரிய மந்திரத்தை 108 முறை சொல்லி பின்பு அணிய வேண்டும். பாலில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு பன்னீரில் அலசி அணிய வேண்டும்.

அணிந்த 60 நாளில் பலன் தெரியும். சனி வலுவாக இருந்தால் சிலருக்கு ஒரே நாளில் கூட தெரியும். பதவி உயர்வுகள் கிடைக்கும். மனக் குழப்பம் அகன்று தெளிவான முடிவுகள் எடுக்க உதவும். தரித்திரம் நின்கிம். தரித்திரம் என்றால் லட்சத்திலும் கோடியிலும் பணப்பற்றாக்குறை இருந்தால்கூட அதுவும் தரித்திர யோகம்தான். யாரேனும் செய்வினை, பில்லி, சூனியம் வைத்திருந்தால் அது வலுவிழந்து போகும்.

யார் அணியலாம்?

சனி, நிலத்துக்கு கீழே உள்ள பொருட்களுக்கும், இரும்புக்கும் அதிபதி ஆவான். பெட்ரோல், டீசல் விற்பவர், தார் ரோடு போடும் அரசு ஒப்பந்தகாரர்கள், பழைய இரும்புப் பொருட்கள் வாங்குவோர், கருங்கொல்லர், இரும்புக் கருவிகள் தயாரிப்போர், லேத் பட்டறை, வண்டிகள் பழுது நீக்கும் பட்டறை உரிமையாளர் மற்றும் பணியாளர், போன்றோர் நீலமணி அணிவதால் மேன்மை அடைவர். செல்வச் செழிப்பு உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் குறையும்.

ஜாதகத்தில் லக்கினத்துக்கோ, ராசிக்கோ 10-க்குடையவனாக சனி இருந்தால், நீலமணி அணியலாம். வலுவானவனாகவும் தொழிலுக்கு அதிபதியாகவும் சிறந்த ஊழியக்காரனாக, பொது மக்கள் பணியில் இருப்பவர்கள். சிலர் கும்பிடு குரு சாமியாக இருக்க வேண்டி வரும். ஆட்சி அதிகாரம் பெற்ற அரசியல் தலைவராக இருந்தாலும், அவர் அரசியல் கூட்டங்களுக்குப் போகும் போது, பொது மக்களைப் பார்த்து வணக்கம் சொல்லியாக வேண்டும்.

பெரிய கடை முதலாளியாக இருந்தாலும் தன் கடையில் பொருள் வாங்க வருவோருக்கு வணக்கம் சொல்லி வரவேற்றுப் பேசியாக வேண்டும். இவ்வாறு பணம், பதவி, செல்வாக்கு இருந்தாலும் சனி மூலமாக அந்த நிலைக்கு வந்திருந்தால் தெரிந்தவர் தெரியாதவர் என அனைவருக்கும் வணக்கம் சொல்லவேண்டும்.

எந்த ராசியினருக்கு நல்லது?

சனி மகாதிசை, சனி புத்தி நடப்பவர்கள் அணியலாம். சனியின் ராசியான மகரம் மற்றும் கும்ப ராசிகளில் பிறந்தவர்கள், சனி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீல மணி அணிவது சிறப்பானதாகும்.

அணிவதால் என்ன பயன்?

நீலமணி ஆக்ஞா சக்கரத்தைத் திறக்க வல்லது. பிட்யூட்டரி சுரப்பை அதிகரிக்கும். இதனால், மன அழுத்தம் குறைந்து மனம் லேசாகும். கற்பனை வளரும். இவர்கள் தனியாக உட்கார்ந்து, தான் என்னவாக உயரலாம் என்று கற்பனை செய்து கொண்டிருப்பார்கள். சனி ஜாதகத்தில் ஆட்சி, உச்சமாக இருப்பவர்களும் நல்ல பயன் தரும் ராசியில் இருப்பவர்களும் நீலமணி அணியலாம். செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள், 8 எண் காரர்கள் 8,17,26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள், நீலமணி அணியலாம். புதன் சுக்கிரன் ராசிக்காரர்கள் லக்னத்துக்காரர்கள் நீலமணி அணிவது சிறப்பு. புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்களாக இருப்பதால் நல்ல மாற்றம் தெரியும்.

தொகுப்பு: பிரபா எஸ்.ராஜேஷ்

The post உயர் பதவி கிடைக்க நீலமணி appeared first on Dinakaran.

Tags : Saturn ,Dinakaran ,
× RELATED இந்த வார விசேஷங்கள்