×

கலர் குண்டு வீசிய விவகாரம்; நீலம் ஆசாத் வீட்டில் சோதனை: அரியானாவில் டெல்லி போலீஸ் முகாம்


புதுடெல்லி: கலர் குண்டு வீசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நீலம் ஆசாத்தின் அரியானா வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவை வளாத்திற்குள் நுழைந்து கலர் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நீலம் ஆசாத் என்பவர், அரியானா மாநிலம் ஜிண்ட் அடுத்த காசோ கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் டெல்லி தனிப்படை போலீசார், நேற்றிரவு அரியானாவில் உள்ள நீலம் ஆசாத்தின் வீட்டிற்கு திடீரென சென்றனர். அங்கிருந்த அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், நீலம் ஆசாத்தின் அறையிலும் சோதனை நடத்தினர். முன்னதாக நீலம் ஆசாத்தின் குடும்பத்தினர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில், ‘போலீஸ் காவலில் உள்ள நீலம் ஆசாத்தை சந்திக்க அனுமதிக்க வேண்டும். எப்ஐஆர் நகலை வழங்க வேண்டும்’ என்று கோரினர்.

இம்மனு விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட நீலம் ஆசாத், தன்னை ஒரு சமூக செயற்பாட்டாளர் என்று கூறியுள்ளார். பல்வேறு போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்றுள்ளார். கடந்த சில ஆண்டுக்கு முன் ஹிசாரில் உள்ள ரெட் ஸ்கொயர் மார்க்கெட் பின்புறம் உள்ள வீட்டில் தங்கியிருந்து, சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார். அதன்பின் அவருக்கு அரசியல் ஆர்வம் அதிகமானதால் சமூக அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். அவரது வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டதில் முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் கிடைத்துள்ளது’ என்றனர்.

The post கலர் குண்டு வீசிய விவகாரம்; நீலம் ஆசாத் வீட்டில் சோதனை: அரியானாவில் டெல்லி போலீஸ் முகாம் appeared first on Dinakaran.

Tags : Neelam ,Delhi Police camp ,Haryana ,New Delhi ,Neelam Azad ,Delhi Police ,Ariana house ,
× RELATED தர்மபுரியில் செந்தூரா மாம்பழம் வரத்து அதிகரிப்பு கிலோ ₹80க்கு விற்பனை