×

2வது காசி தமிழ் சங்கமம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

வாரணாசி: காசி தமிழ் சங்கமத்தின் 2ம் கட்ட நிகழ்வை பிரதமர் மோடி வாரணாசியில் நேற்று தொடங்கி வைத்தார். பண்டைய இந்தியாவின் 2 முக்கியமான கல்வி மற்றும் கலாச்சார மையங்களான தமிழ்நாட்டிற்கும் உபியின் காசிக்கும் இடையிலான பிணைப்புகளை புதுப்பிக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை ஒன்றிய அரசு நடத்தி வருகிறது. முதல் கட்ட காசி தமிழ் சங்கமம் கடந்த ஆண்டு நவம்பர் 16 முதல் டிசம்பர் 16ம் தேதி வரை நடந்தது. அதில், தமிழகத்தில் இருந்து 2,500க்கும் மேற்பட்டோர் காசி, பிரயாக்ராஜ், அயோத்தி உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து, 2ம் கட்ட காசி தமிழ் சங்கமம் கலாச்சார விழாவை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். வாரணாசியின் நமோ படித்துறையில் நடந்த தொடக்க விழாவில், கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை இயக்கப்படும் காசி தமிழ் சங்கமம் வாராந்திர ரயிலை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 2ம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க 42,000 பேர் பதிவு செய்திருந்த நிலையில், அதில் 1,400 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 200 பேர் கொண்ட தனித்தனி குழுக்களாக தமிழகத்தில் இருந்து காசிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். தமிழ்நாடு மற்றும் காசியின் கலை மற்றும் கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், உணவு வகைகள் மற்றும் பிற சிறப்பு தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் அரங்குகள் நமோ படித்துறையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த நிகழ்வின் போது, இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் நவீன கண்டுபிடிப்புகள், வணிக பரிமாற்றங்கள், கலந்துரையாடல்கள், சொற்பொழிவுகள் போன்றவை ஏற்பாடு செய்யப்படும்.

விழாவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில், ‘‘நீங்கள் எங்கள் விருந்தினர்கள் மட்டுமல்ல, எங்கள் குடும்ப உறுப்பினர்கள். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன். பிற நாடுகளில் தேசம் என்பது அரசியல் புரிதலோடு அணுகப்பட்டது. ஆனால் இந்தியாவில் தேசம் என்பது ஆன்மீகம் என்ற ஆணிவேரை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற புனிதர்கள்தான் ஒரு தேசமாக இந்தியாவை ஒருங்கிணைத்துள்ளனர். இவர்கள்தான் தங்களின் யாத்திரையின் போது தேசத்தின் விழிப்பினை ஆன்மாவை தட்டி எழுப்பினார்கள்.

தமிழகத்தின் ஆதின துறவிகளும் கூட பல நூற்றாண்டு காலமாக காசி போன்ற சிவபதிகளுக்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளார்கள். திருப்பனந்தாள் ஆதின கர்த்தர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் காசிவாசி என எழுதுகிறார்கள். இதுதவிர தமிழ் ஆன்மீக நூல்களிலும் பாடல் பெற்ற தலமாக காசி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மரபுகள் நம்மை எப்போதும் ஒன்றிணைக்கின்றன. காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகள் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்கிற உணர்வுக்கு வலுசேர்க்கின்றன’’ என்றார்.

* மோடி பேச்சு ஏஐ மூலம் தமிழில் மொழி பெயர்ப்பு
காசி தமிழ் சங்கம 2ம் கட்ட நிகழ்வை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது இந்தியில் பேசிய அவரது உரை செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பம் மூலம் முதன் முதலில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மோடி பேசிய உரையை பார்வையாளர்கள் உடனுக்குடன் ஹெட்போன் உதவியுடன் கேட்டனர்.

* ஆம்புலன்சுக்கு வழிவிட்டார்
வாரணாசிக்கு நேற்று வந்த பிரதமர் மோடி நடேசர் பகுதியில் உள்ள பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று கொண்டிருந்தார். அப்போது மோடியின் வாகனத்துடன் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து சென்ற போது, அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதற்கு பிரதமரின் கார் வழிவிட்டு ஒதுக்கி பின்னர் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. வாரணாசியில் இன்று ரூ.19,155 கோடியில் 37 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

The post 2வது காசி தமிழ் சங்கமம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Modi ,2nd Kashi ,Tamil ,Society ,Varanasi ,Khasi Tamil Sangam ,India ,2nd Kashi Tamil Sangam ,Dinakaran ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...