×

அயோத்தியில் மசூதி கட்டுமான பணிகள் மே மாதம் தொடக்கம்: அறக்கட்டளை நிர்வாகம் தகவல்

லக்னோ: அயோத்தியின் தன்னிபூரில் மசூதி கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை தெரிவித்துள்ளது. பாபர் மசூதி ராமஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், அயோத்தியில் மசூதி கட்ட இடம் ஒதுக்கி தரும்படி உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, அயோத்தியின் தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை உத்தர பிரதேச அரசு ஒதுக்கியது.

மசூதி கட்டுமான பணிகளை நிர்வகிக்க இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை(ஐஐசிஎப்) என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தன்னிபூரில் மசூதி கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கும் என இந்தோ – இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறக்கட்டளையின் தலைமை அறங்காவலர் ஜுஃபர் பருக்கி கூறுகையில், “நிதிப்பற்றாக்குறை காரணமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டதால் கட்டுமான பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

2024 பிப்ரவரி மாதத்துக்குள் மசூதியின் இறுதி வடிவமைப்பு தயார் செய்யப்பட்டு நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒப்புதல் கிடைத்தவுடன் பிப்ரவரி மாதத்திலேயே மசூதிக்கான வளாகத்தில் தள அலுவலகம் அமைக்கப்படும். தொடர்ந்து மே மாதம் மசூதி கட்டுமான பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

The post அயோத்தியில் மசூதி கட்டுமான பணிகள் மே மாதம் தொடக்கம்: அறக்கட்டளை நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ayodhya ,Lucknow ,Tannipur ,Indo-Islamic Cultural Trust ,Babar ,Dinakaran ,
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்