×

மக்களவை தேர்தல் வியூகம் வகுக்க காங்கிரஸ் காரிய கமிட்டி வரும் 21ம் தேதி கூடுகிறது: இந்தியா கூட்டணி கட்சிகள் நாளை ஆலோசனை

புதுடெல்லி: இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடப்பதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் 21ம் தேதி நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை கூட உள்ளது. இதில், தொகுதி பங்கீடு, கூட்டு பிரசாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

குறிப்பாக, கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, ‘நான் அல்ல, நாம்’ என்கிற முழக்கமும் வெளியிடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் 21ம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் தெலங்கானாவில் வெற்றி பெற்றாலும், சட்டீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சியை பறி கொடுத்துள்ளது. மபி, மிசோரமில் தோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து காரிய கமிட்டியில் விவாதிக்கப்பட உள்ளது.

அதோடு, தோல்விக்கான காரணங்களை கண்டறிவதோடு, 2024 தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழி குறித்தும், தேர்தல் வியூகம் குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் பாரத் ஜோடோ நடைபயணத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி அடுத்ததாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி அடுத்த கட்ட நடைபயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாகவும் காரிய கமிட்டியில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. 5 மாநில தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுவது குறிப்பிடத்தக்கது.

The post மக்களவை தேர்தல் வியூகம் வகுக்க காங்கிரஸ் காரிய கமிட்டி வரும் 21ம் தேதி கூடுகிறது: இந்தியா கூட்டணி கட்சிகள் நாளை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Congress Working Committee ,Lok Sabha ,India ,New Delhi ,Congress ,
× RELATED புதிய எம்.பி.க்களை வரவேற்க தயார்: மக்களவை செயலகம் அறிவிப்பு