×

பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் இன்று துவக்கம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

கோவை: பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் இன்று தொடங்கி வைக்கிறார். பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மக்களிடம் மனுக்கள் வாங்கிய 30 நாட்களில் தீர்வு காண்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் துவக்க விழா கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி அரங்கத்தில் இன்று நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 9.10 மணிக்கு கோவைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். விமான நிலையத்தில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமி, திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட உள்ளது. பின்னர், விழா நடைபெறும் அரங்குக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறார்.

இந்த விழாவை முடித்து கொண்டு கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைக்கு சொந்தமான மைதான பகுதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அங்கு கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரத்தில் முதற்கட்டமாக 133.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்க உள்ள செம்மொழி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து, 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழா முடிந்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கும் முதல்வர், மதியம் 2.30 மணி அளவில் விமானம் மூலம் சென்னை வருகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் இருந்து விழா நடக்கும் பகுதிகள் வரை சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

* மனுக்களை பெற 1,745 முகாம்கள்
‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்கு முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று முதல் ஜனவரி 6ம் தேதி வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 1,745 முகாம்கள் நடத்தப்படும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜனவரி முதல் வாரத்திலிருந்து ஜனவரி 31 வரை “மக்களுடன் முதல்வர்” திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

நகர்ப்புறங்களில் நடத்தப்படும் முகாம்கள் முடிவுற்ற பின்னர், அடுத்த கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

* ஒரே விமானத்தில் முதல்வர், ஆளுநர் கோவை பயணம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் நடக்கும் விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 9 மணிக்கு முதல்வர் கோவை விமான நிலையம் வருகிறார். அதே விமானத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் கோவை வருகிறார். பின்னர், அவர் காரில் நாமக்கல் சென்று தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். ஆளுநரின் செயல்பாடுகள் தமிழக அரசுக்கு எதிராக இருப்பதாக அடிக்கடி சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இருவரும் இன்று ஒரே விமானத்தில் பயணம் செய்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* 52 அரசு திட்டம் குறித்து மனுக்களை அளிக்கலாம்
‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் தமிழக எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை, வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை, வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய அரசுத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் 52 அரசு திட்டங்களின் சேவைகளுக்கான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம்.

The post பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் இன்று துவக்கம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Goa ,K. Stalin ,KOWAI ,K. ,Stalin ,Cove ,Chief Minister ,Dinakaran ,
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...