நெல்லை, டிச. 17: நெல்லை மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் நாளை முதல் டிச.31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முதல்வரின் முன்னோடி திட்டமான ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் மூலம் 13 துறைகளில் 50க்கும் மேற்பட்ட சேவைகளை அந்தந்த ஊர்களுக்கே சென்று வழங்கும் சிறப்பு முகாம்கள் நாளை (18ம் தேதி) முதல் டிச.31ம் தேதி வரை நெல்லை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள 4 கிராம ஊராட்சிகளில் நடக்கிறது.
இந்த முகாம்களில் பொதுமக்கள் வருவாய், உள்ளாட்சி, காவல், தொழிலாளர் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், பிற்படுத்தப்பட்டோர் நலம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட 13 துறைகளின் சார்பில் வழங்கப்படும் 50-க்கும் மேற்பட்ட சேவைகளை அவரவர் பகுதியிலேயே பெற்றுக் கொள்ளலாம். இதில் வீட்டு வரி, திட்ட அனுமதி, குடும்ப அட்டை, புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம், வருமானம், இருப்பிடம் மற்றும் சாதி சான்றுகள், மானிய கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அடங்கும். முகாம்களில் சேவைக்கான விண்ணப்பங்களை முழுமையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான சிறப்பு இ-சேவை மையங்கள் முகாம்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை பதிவு செய்து ரசீது பெற்றவுடன் எந்தத் துறையில் சேவையை பெற வேண்டுமோ, அந்தத் துறையின் அரங்கிற்கு சென்று விண்ணப்பங்களை அளித்து கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால், அதற்கான விவரங்களையும் பெற்று அதை உடனுக்குடன் வழங்கி பொதுமக்கள் சேவைகளை விரைவாக பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்களின் மீது இயன்ற அளவு விரைவாகவும், அதிகபட்சம் 30 நாட்களுக்குள்ளும் முழுமையான உத்தரவு பிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் நல்ல முறையில் கிடைப்பதை உறுதி செய்திட ஒவ்வொரு முகாமிற்கும் துணை கலெக்டர், உதவி இயக்குனர் நிலையில் முகாம் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல் கட்டமாக நகரப்பகுதிகளிலும், பேரூராட்சிகளிலும் நடக்கும் இந்த முகாம் அடுத்த கட்டமாக கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.மக்கள் அரசின் பல்வேறு துறைகளை நாடிச் சென்று பெறக்கூடிய சேவைகளை அந்தந்த ஊர்களுக்கே அனைத்து துறைகளும் நேரடியாகச் சென்று வழங்கக் கூடிய இந்த சிறப்புமிக்க திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கி சிறந்த முறையில் பயன்படுத்தி சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post நெல்லை மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் நாளை முதல் சிறப்பு முகாம்கள்: கலெக்டர் கார்த்திகேயன் தகவல் appeared first on Dinakaran.