×

ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டியில் ரூ.10.50 கோடி மதிப்பில் கட்டப்படும் போட்டி தேர்வு மையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

ஒட்டன்சத்திரம், டிச. 17: ஒட்டன்சத்திரம் தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கள்ளிமந்தயம் அருகே கட்டப்பட்டு வரும் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பணிகள், காளாஞ்சிபட்டியில் கட்டப்பட்டு வரும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் பணிகள், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

ஆத்தூரில் கூட்டுறவுத்துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கன்னிவாடியில் உயர்கல்வி துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளிமந்தையத்தில் உயர்கல்வி துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சின்னையகவுண்டன்வலசில் அறநிலையத்துறை சார்பில் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. ஒட்டன்சத்திரத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை துவங்கப்பட்டுள்ளன. மேலும், பழநியில் சித்தா மருத்துவ கல்லுாரி, கொடைக்கானலில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே 2 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் ஒரு தொழில்நுட்ப கல்லூரி பழநி நகரில் இயங்கி வருகின்றன.

அங்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகளவில் இருப்பதால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கூடுதலாக கல்லூரிகள் துவங்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்தினோம். அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒட்டன்சத்திரம் சின்னையகவுண்டன்வலசில் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வகுப்புகளை 2021 டிச.1ல் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்தக் கல்லுாரி தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஒட்டன்சத்திரம் காளாஞ்சிப்பட்டியில் 8.5 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் தேர்வு செய்யப்பட்ட ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் கல்லூரிக்கு புதிய நிரந்தர கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

தற்போது கல்லூரி வளாகத்தை சுற்றி ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் மற்றும் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இப்பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு வசிக்கும் மாணவிகளின் உயர்கல்வி மேம்பாட்டுக்காக இப்பகுதியில் கல்லுாரி துவங்கப்பட்டுள்ளது. படித்த மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெறுவதற்காக போட்டி தேர்வுகளுக்கான அறிவுசார் மையம் காளாஞ்சிப்பட்டியில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இப்பயிற்சி மையத்தில் வகுப்பறைகள், பயிற்சியாளர்கள் அறை, ஆசிரியர்கள் அறை, கணினி அறை, நூலகம், வாகனம் நிறுத்துமிடம் உள்ளவைகளும் அடங்கவுள்ளது.

மேலும், 1000 பேர் அமர்ந்து படிக்கக்கூடிய வகையில் கருத்தரங்கு கட்டிடமும், உணவு அருந்தக்கூடிய உணவருந்தும் அறைகளும் கட்டப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்களுக்கு தேவையான இருக்கை வசதிகளும், உட்புற சாலை வசதிகளும், வாகனம் நிறுத்தும் வசதிகளும், சுற்றுசுவர் வசதிகளுடன் சிறப்பாக இக்கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு மத்திய, மாநில அரசு உட்பட பல்வேறு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மாணவ, மாணவிகள் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, குறிக்கோளுடன் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது ஒன்றிய செயலாளர்கள் ஜோதிஸ்வரன், தர்மராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் சத்திய புவனா, அய்யம்மாள், நகர்மன்ற தலைவர் திருமலைச்சாமி, வருவாய் கோட்டாட்சியர் சரவணன், முதன்மை பொறியாளர் ரகுநாதன், கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ், செயற்பொறியாளர் தங்கவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், வேதா, ஒன்றிய அவை தலைவர் செல்வராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் முருகானந்தம், சிவக்குமார், ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா காமையன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டியில் ரூ.10.50 கோடி மதிப்பில் கட்டப்படும் போட்டி தேர்வு மையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல் appeared first on Dinakaran.

Tags : Kalanchipatti ,Ottanchatram ,Minister ,A. Chakrapani ,Othanchatram ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து...