×

வரும் 28ம் தேதி தொடங்கவுள்ள செங்கை புத்தக திருவிழாவுக்கான இலச்சினை: கலெக்டர் வெளியிட்டார்

செங்கல்பட்டு டிச.17: செங்கல்பட்டில் வரும் 28ல் துவங்கி ஜனவரி 4ம் தேதி வரை நடைபெற உள்ள புத்தகத்திருவிழா இலச்சினையை கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டார். மக்களிடம் வாசிப்பை வசமாக்கி வாழ்வை வளமாக்குவது நூல்கள். இப்படிப்பட்ட நல்ல நூல்களைக் கொண்டாடும் வாசகர்களின் திருவிழா தமிழக அரசின் முன்னெடுப்பில் தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாநகரில் அமைந்துள்ள அலிசன் காசி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வரும் 28 முதல் ஜனவரி 4ம் தேதி வரை செங்கை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வினை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளது. இதனை வாசகர்கள் சிறப்புற பயன்படுத்திக் கொள்ள ேவண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தகத் திருவிழாவினை கலெக்டர் தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைக்க உள்ளார். இத்திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட அரங்குகளில், ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. நாள்தோறும் பகல் வேலைகளில் பள்ளி மாணவர்களுக்கான நிகழ்வுகளும், பல்வேறு போட்டிகளும் நடைபெறவுள்ளன. மாலை நேரங்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர். இதில் திருச்சி சிவா எம்பி, முன்னாள் தலைமைச் செயலாளர்‌ இறையன்பு, மருத்துவர் சிவராமன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பத்திரிக்கையாளர் திருப்பூர் கிருஷ்ணன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், காலநிலை வல்லுநர் எஸ்.ரமணன் ஆகியோரின் சிறப்புரையும், சுகிசிவம் குழுவினரின் பட்டிமன்ற நிகழ்ச்சியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

மாணவர்களுக்கான கோளரங்கமும், உணவகமும், பல்வேறு கேளிக்கை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. நூல் வெளியீட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. தொடக்க விழா நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த எம்பி, எம் எல்ஏக்கள், மாவட்டத் திட்ட அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், தாம்பரம், செங்கல்பட்டு ஆணையாளர்கள் உள்ளிட்ட பிற அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வுகளுக்கான விளக்கக் குறிப்பு இலச்சினை வெளியீடு, கேட்பொலி வெளியீடு ஆகியவற்றை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ராகுல்நாத் நேற்று வெளியிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இந்து பாலா, செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சாகிதா பர்வீன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வரும் 28ம் தேதி தொடங்கவுள்ள செங்கை புத்தக திருவிழாவுக்கான இலச்சினை: கலெக்டர் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Sengai Book Festival ,Chengalpattu ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!