×

அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

காரமடை, டிச.16: காரமடை அருகே உள்ள தோலம்பாளையம் பகுதியில் அருள்மிகு திரிபுர சுந்தரி திப்பா தேவி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 13ம் தேதி விநாயகர் கோயிலில் இருந்து முளைப்பாலிகை, தீர்த்தக்குடம் அழைத்தல் நிகழ்ச்சி, மங்கள இசை, விநாயகர் வழிபாடு, மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை உள்ளிட்டவையுடன் துவங்கியது. தொடர்ந்து, தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு விசேஷ பூஜைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. இதனை தொடர்ந்து யாகவேள்வி, விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனம், விசேஷ சந்தி, பஞ்சசுத்தி, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, பாவனாபிஷேகம், முதலாம், இரண்டாம், மூன்றாம் காலயாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

இதனையடுத்து, நேற்று காலை மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சி, நான்மறைகள் போற்றும் அம்பிகைக்கு நான்காம் கால யாக வேள்வி, வேதிகார்ச்சனை, சாந்தி கும்ப பூஜை நடைபெற்றன. பின்னர் புனித நதிகளில் இருந்து புனித நீர் விழா கமிட்டியினரால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து, விநாயகர் முதலான பரிவார தெய்வங்களுக்கும், மூலஸ்தான அம்மன் திப்பாதேவிக்கும் மஹா கும்பாபிஷேக விழா சிவாகம விசாரத். குருமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. பின்னர், புனித நீர் கோவிலை சுற்றிலும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், விழா குழு தலைவர் தாளி கவுடர், செயல் தலைவர் சின்னராஜ், விழா கமிட்டியினர், குலமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.

The post அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Amman ,Temple ,Kumbabhishek ceremony ,Karamadai ,Tholampalayam ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா