×

எண்ணூர் முகத்துவாரத்தில் 40 மெட்ரிக் டன் எண்ணெய் கழிவு அகற்றம்: அதிகாரிகள் தகவல்

 

திருவொற்றியூர், டிச.17: எண்ணூர் முகத்துவார ஆற்றில் கச்சா எண்ணெய் படிந்திருப்பதை அகற்றும் பணியில் மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் சிபிசிஎல் நிறுவனம் இணைந்து ஈடுபட்டு வருகிறது. இதற்காக, 100 படகுகள் பயன்படுத்தப்பட்டு, எண்ணூர் பகுதியில் உள்ள 8 கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆற்றில் மிதக்கும் கச்சா எண்ணெய் படலத்தை பக்கெட் மற்றும் ஜக் ஆகியவற்றின் மூலம் எடுத்து பேரல்களில் நிரப்பி, அதை கரையில் பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 5வது நாளாக இந்த பணி தொடர்ந்தது. சிபிசிஎல் நிறுவனம் சார்பில் மீனவர்களுக்கு கையுறை, கண்ணாடி, கம்பூட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பணியில் ஈடுபடும் மீனவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யவும் மாநகராட்சி சார்பில் 6 குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

கரையோரத்தில் உள்ள கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்றும் வகையில் பொக்லைன், ஹைட்ராஸ், டிராக்டர் டிரெய்லர், டம்பர்கள், ஸ்கிம்மர், கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் போன்ற பல்வேறு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டு அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாசுக்கட்டுப்பாடு வாரியம், மாநகராட்சி, வனத்துறை என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் எண்ணூரில் முகாமிட்டு கச்சா எண்ணெய் அகற்றும் பணியை கண்காணித்து வருகின்றனர்.தற்போது வரை சுமார் 40 மெட்ரிக் டன் அளவிற்கு இந்த எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எண்ணூர் முகத்துவார பகுதி மட்டுமின்றி சத்தியமூர்த்தி நகர், சடையன்குப்பம் போன்ற இடங்களில் சுமார் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரையோரங்களில் இந்த கச்சா எண்ணெய் படலம் மிக திடமான அளவில் படிந்துள்ளது.

அதேபோல், பழவேற்காடு செல்லும் பாதையிலும் இந்த கச்சா எண்ணெய் படலம் பல இடங்களில் பரவியுள்ளதால், மீனவர்கள் மற்றும் நவீன இயந்திரங்களை கொண்டு இந்த கச்சா எண்ணெய் அகற்றப்படுகிறது. எவ்வளவு எடுத்தாலும் நீரோட்டத்தில் எண்ணெய் படலம் வந்து கொண்டே இருப்பதால் இதை முழுமையாக அகற்றுவது சவாலாக உள்ளது.  வரும் 18ம் தேதிக்குள் இந்த எண்ணெய் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளதால் சிபிசிஎல் நிறுவனம் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்துவது அவசியமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொழில் செய்ய முடியாமல் மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கடலுக்கு சென்றால்தான் வருமானம் என்ற நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் தற்போது வருவாய் இன்றி தவிக்கிறது.

இவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதிகளில் எண்ணெய் படலத்தை அகற்ற பல ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எந்தவிதமான இழப்பீடு சார்ந்த உதவியும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே ஒன்றிய, மாநில அரசுகள் இதை கணக்கெடுத்து விரைவாக அவர்களுக்கு நிதி உதவியை வழங்க வேண்டும்,’’ என்றனர்.

குடியிருப்பு பகுதிகளில் அகற்றப்படவில்லை
எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் மிதக்கும் எண்ணெய் படலம் அப்புறப்படுத்தப்பட்டு வரும் நிலையில், திருவொற்றியூர் மேற்கு பகுதிகளான சத்தியமூர்த்தி நகர், கலைஞர் நகர், சரஸ்வதி நகர், எர்ணாவூர் மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இந்த எண்ணெய் படலத்தால், வீட்டில் வைக்கப்பட்டிருந்த கட்டில், பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், அயன்பாக்ஸ் மற்றும் துணிமணிகள், பள்ளி மாணவ மாணவிகள் புத்தகங்கள் என அனைத்தும் சேதமாகியுள்ளது. தற்போது சகஜ நிலைமை திரும்பி வீட்டிற்கு வந்துள்ள பொதுமக்கள் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களெல்லாம் சேதமாகியிருப்பதால் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வீடுகளில் படிந்துள்ள எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தாமல், துர்நாற்றத்திலேயே வசிக்க வேண்டிய அவல நிலைக்கு பொதுமக்கள் ஆளாகியுள்ளனர். இந்த பிரச்னை குறித்து சிபிசிஎல் நிறுவனமோ, மாசு கட்டுப்பாடு வாரியமோ கண்டு கொள்ளவில்லை, என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஐஐடி மாணவர்கள் ஆய்வு
புழல் ஏரியின் உபரி நீரில் கச்சா எண்ணெய் கலந்து வந்ததால் எண்ணூர் முகத்துவார ஆறு மற்றும் கடல் பகுதியில் மாசு ஏற்பட்டுள்ளது. இங்கு படிந்திருக்கும் கச்சா எண்ணெய் படலத்தை சிபிசிஎல் நிறுவனம் மூன்று தனியார் ஏஜென்சிகளை கொண்டு அப்புறப்படுத்தி வருகிறது. அதோடு மட்டுமின்றி தொடர்ந்து வரக்கூடிய கொசஸ்தலை ஆற்று நீரில் எண்ணெய் கலந்து வருவதால் நீரின் தன்மை மாறக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த கொசஸ்தலை ஆற்று நீரில் இதுவரை கலந்து வந்த கச்சா எண்ணெயின் அளவு மற்றும் உப்பு தண்ணீரில் கலந்திருக்கும் கச்சா எண்ணெயின் அளவு ஆகியவற்றை ஐஐடி மாணவர் குழுவினர் 20க்கும் மேற்பட்டோர் நவீன உபகரணங்களை கொண்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

அலையாத்தி காடுகள் அழியும்
எண்ணூர் கடைமடை பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் சுற்றுச்சூழல் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க பயன்படுகிறது. இந்த அலையாத்தி காட்டில் தான் நண்டு, இறால், மீன் போன்றவை இனப்பெருக்கம் செய்யும். தற்போது இந்த எண்ணெய் படலத்தால், அலையாத்தி காடு அழிந்துவிடும் அபாயம் இருப்பது மட்டுமின்றி, வரக்கூடிய காலங்களில் இந்த இடத்தில் கடல் வாழ் உயிரினங்களில் இனப்பெருக்கம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நிலத்தடி நீர் மாசு
முகத்துவார கரையோரம் மட்டுமின்றி நிலப்பரப்பிலும் பல கிலோமீட்டர் சுற்றளவிற்கு எண்ணெய் படலம் படர்ந்து அவை பூமியில் இறங்கி உள்ளது. இதனால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசுபடும் அபாயமும் ஏற்பட்டுள்ளதோடு பொது மக்களுக்கு குடிநீர் மற்றும் அன்றாட தேவைகளுக்கு கூட நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.

பறவைகள் பாதிப்பு
எண்ணூர் முகத்துவாரத்தை ஒட்டி உள்ள குருவிமேடு பகுதிக்கு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து செல்வது வழக்கம். கொக்கு, நாரை மற்றும் கூழைக்கடா எனப்படும் வெள்ளை நிற பெலிக்கான் பறவைகள் ஏராளமாக இங்கு வரும். தற்போது இந்த எண்ணெய் படலம் குருவிமேடு பகுதியிலும் பரவியதால் இங்கு இருந்த பல பறவைகளுக்கு கச்சா எண்ணெய் உடலில் பட்டதால் பறக்க முடியாமல் அவதிப்படுவதோடு ஏராளமான பறவைகள் இறந்துள்ளன. இது பறவைகளின் வருகை காலம். தற்போது இந்த எண்ணெய் படலத்தால் இதனால் பறவைகளின் வருகை நின்றுவிட்டதோடு அதனுடைய இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது.

The post எண்ணூர் முகத்துவாரத்தில் 40 மெட்ரிக் டன் எண்ணெய் கழிவு அகற்றம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ennore estuary ,Thiruvottiyur ,Pollution Control Board ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...