×
Saravana Stores

இரு தரப்பு உறவை விரிவுபடுத்த ஓமன் சுல்தான் தாரிக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை: 10 துறைகளில் தொலைநோக்கு திட்டம்

புதுடெல்லி: இரு தரப்பு உறவை விரிவுபடுத்த 10 துறைகளில் தொலைநோக்கு திட்டத்திற்கு பிரதமர் மோடியும், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கும் ஒப்புதல் அளித்துள்ளனர். ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் முதல் முறையாக 3 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி வந்துள்ளார். ராஷ்டிரபதி பவன் வந்த அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, ஓமன் சுல்தான் தாரிக் தலைமையில் இருதரப்பு உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது.

இதில், இரு தரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தொலைநோக்கு திட்டத்திற்கு இரு தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். இது குறித்து, வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா அளித்த பேட்டியில், ‘‘இரு தலைவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை விரிவாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது. கடல்வழி வர்த்தகம், பாதுகாப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து இணைப்பு, பசுமை ஆற்றல், விண்வெளி, டிஜிட்டல் பண பரிவர்த்தனை, சுகாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவை விரிவுபடுத்துவதற்கான தொலைநோக்கு திட்டத்திற்கு இரு தலைவர்களும் ஒப்புதல் தந்துள்ளனர்.

மேலும், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய இரு தலைவர்களும் உறுதி அளித்துள்ளனர். ஹமாஸ், இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில், தீவிரவாதத்தின் சவால் மற்றும் பாலஸ்தீனப் பிரச்னைக்கு இரு நாடுகளின் தீர்வை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான தேவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்’’ என்றார். 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஓமன் சுல்தான் இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருப்பதால் இது வரலாற்று சிறப்புமிக்க நாள் என பிரதமர் மோடி புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

The post இரு தரப்பு உறவை விரிவுபடுத்த ஓமன் சுல்தான் தாரிக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை: 10 துறைகளில் தொலைநோக்கு திட்டம் appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Sultan Tariq ,Oman ,New Delhi ,Sultan Haitham Bin ,
× RELATED ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும்,...