×

கச்சா எண்ணெய் கழிவு சர்ச்சை அடங்குவதற்குள் மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து


* 1 கி.மீ. தூரம் புகை ெவளியேறியதால் பரபரப்பு
* பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

சென்னை: கச்சா எண்ணெய்க் கழிவு வெளியேறிய சர்ச்சை அடங்குவதற்குள் சென்னை மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை ெவளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மணலியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு இங்கிருந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற பல்வேறு விதமான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில், மிக்ஜாம் புயல், மழையின் போது மணலி சி.பி.சி.எல் நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் கழிவுகள் வெள்ள நீரோடு கலந்து வெளியேறியது.

இது வடசென்னையில் பக்கிங்காம் கால்வாய் வழியாக வெளியேறி கொசஸ்தலை ஆற்றில் கலந்து எண்ணூர் முகத்துவார கடலில் பரவியுள்ளது. இதனால் அவற்றில் வாழும் உயிரினங்கள் மட்டுமல்லாமல் மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளும் பாழானது. இதனால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். குடியிருப்பு பகுதியில் புகுந்த வெள்ளத்தில் கலந்து, வீடுகளுக்குள்ளும் எண்ணெய் கழிவுகள் படிந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. மேலும், எண்ணெய் கழிவுகளை விரைவாக அகற்ற தமிழக அரசுக்கும், சிபிசிஎல் நிறுவனத்துக்கும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை எண்ணூர் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து டன் கணக்கில் எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் நேற்று காலை சிபிசில் நிறுவனத்தின் ஒரு பகுதியில் இருந்து திடீரென கரும் புகை குபுகுபு என்று வெளியேறியது. இது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியது. இதனால், சிபிசிஎல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் பீதியும், கடும் அச்சமும் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மணலி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, நிறுவனத்தின் உள்ளே இருக்கக்கூடிய நிலக்கரி தொடர்பான இயந்திரத்தில் லேசான தீ விபத்து ஏற்பட்டதும், உடனடியாக உள்ளே இருந்த தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் தெரிய வந்தது. மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றியுள்ள பகுதிகளிலும் தண்ணீர் தெளிக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஏற்கனவே மணலியில் நேற்று காலையில் பனிமூட்டம் வழக்கத்தை விட அதிமாக இருந்தது. இந்த நிலையில் புகை மூட்டமும் சேர்ந்ததால் பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.

The post கச்சா எண்ணெய் கழிவு சர்ச்சை அடங்குவதற்குள் மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Manali CPCL ,Chennai ,Manali CPCL Company ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...