×

விளக்கு வைக்கும் போது இந்த இரண்டு வரி ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்

ராமனின் அவதாரத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது மூன்று தொடர்களை ஆழ்வார்கள் வாக்கிலிருந்து எடுத்து பெரியவாச்சான் பிள்ளை அமைக்கிறார். இதில் உள்ள பெரும்பாலான சொற்கள் குலசேர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியிலிருந்து கோர்த்தவை. அந்தப் பாசுரம் இது.

`அங்கண் நெடு மதில் புடை சூழ்
அயோத்தி என்னும் அணி நகரத்து
உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெங் கதிரோன் குலத்துக்கு ஓர்
விளக்காய்த் தோன்றி
விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்
செங்கண் நெடுங் கருமுகிலை
இராமன்தன்னைத் தில்லைநகர்த்
திருச்சித்ரகூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை
என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே’

இந்தப் பாடலில் உள்ள பிரதான விஷயங்கள் இது.

1. அயோத்தி என்னும் அணி நகரம்
2.வெங்கதிரோன் குலத்துக்கு விளக்கு
3.கோசலை தன் குலமதலை
4. தயரதன் தன் மகன்

இதில் முதலில் கவனிக்க வேண்டியது ‘‘தோன்றி’’ என்ற வார்த்தை. “தயரதன் தன் மகனாய் தோன்றி” என்று ராம அவதாரத்தைச் சொல்லுகின்றார்.

“தோன்றுதல்” என்றாலே, எங்கோ உள்ள பொருள் கண்களுக்குத் தெரியும் படியாகத் தோன்றுதல். இல்லாத பொருள் தோன்றுவதில்லை. பரமாத்மா எங்கும் பரந்து இருப்பவர்.

ஐம்பூதங்களிலும் மறைந்திருப்பவர். இதை நம்மாழ்வார்;
`பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்தஅண் டமிதென நிலவிசும் பொழிவற’
கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருள்தொறும்
கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே’

– எனும் பாசுரத்தில் சொல்லுகின்றார்.

ஆனால், அவனைக் கண்களால் பார்க்க முடியுமா? முடியாது. கண்ணால் பார்க்கும் படியாகச் செய்ய வேண்டுமானால் ஏதாவது ஒரு வடிவெடுத்து அவன் தோன்ற வேண்டும். பகவான் தயரதன் மகனாய், கோசலையின் குலமதலையாய், அயோத்திக்கு பெருமை சேர்ப்பவனாய், சூரிய குலத்துக்கு ஒரு விளக்காய் தோன்றினான் என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. இதில் இன்னொரு சூட்சுமம் பாருங்கள். சூரிய குலத்துக்கு ஒரு விளக்கு என்கிறார். சூரியனே விளக்கு. அதற்கு ஒரு விளக்கா?

ஒரு விளக்கு சுடர்விட்டு எரிய வேண்டுமானால், அதை ஏற்ற இன்னும் ஓர் ஆதாரமான பொறி அல்லது விளக்கு வேண்டும். சூரியன் வெளிச்சம் பெறுவது பகவான் என்னும் விளக்கிடம் இருந்து அல்லவா! சூரிய விளக்கு ஒளி அடைந்து பிரகாசிக்க வேண்டுமானால் பகவானின் அருள் அவசியம். அதனால்தான் சூரியனை சூரிய நாராயணன் என்று பகவானின் அந்தர்யாமித்துவத்தைக் குறிப்பிடுவோம்.

அதுதவிர, பகவான் பரமபதத்தில் பிரகாசிப்பது இல்லை. அது பகல் விளக்கு போல. இங்கேதான் அவன் பிரகாசிக்கிறான், இது இருட்டில் விளக்கு போல. அது மட்டும் இல்லை, பகவான் சூரிய குலத்தில் தோன்றியதால் அந்த குலமே பிரகாசம் அடைந்தது. சூரிய குல வரிசை அதாவது, இஷ்வாகு குல வரிசை இப்படி வருகிறது.

ஸ்ரீராமரின் 68 தலைமுறை

1. பிரம்மாவின் மகன் – மரீசீ
2. மரீசீயின் மகன் – கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் – விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன் – மனு
5. மனுவின் மகன் – இஷ்வாகு
6. இஷ்வாகுவின் மகன் – விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன் – புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் – அணரன்யா-1
9. அணரன்யாவின் மகன் – ப்ருது
10. ப்ருதுவின் மகன் – விஷ்வாகஷா
11. விஷ்வாகஷாவின் மகன் – ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் – யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் – ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் – வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் – குவலஷ்வா
16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் – ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன் – ஹர்யஷ்வா-1
19. ஹர்யஷ்வாவின் மகன் – நிகும்ப்
20. நிகும்பின் மகன் – சன்டஷ்வா
21. சன்டஷ்வாவின் மகன் – க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் – ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் – யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் – மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் – அம்பரீஷா
26. அம்பரீஷாவின் மகன் – ஹரிதா
27. ஹரிதாவின் மகன் – த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் – ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன் – அணரண்யா-2
30. அணரண்யாவின் மகன் – த்ரஷஸ் தஸ்வா
31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் – ஹர் யஷ்வா-2
32. ஹர்யஷ்வாவின் மகன் – வஸுமான்
33. வஸுமாவின் மகன் – த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் – த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் – திரிசங்கு
36. திரிசங்குவின் மகன் – ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரனின் மகன் – ரோஹி தாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் – ஹரித்
39. ஹரித்தின் மகன் – சன்சு
40. சன்சுவின் மகன் – விஜய்
41. விஜயின் மகன் – ருருக்
42. ருருக்கின் மகன் – வ்ருகா
43. வ்ருகாவின் மகன் – பாஹு
44. பாஹுவின் மகன் – சாஹாரா
45. சாஹாராவின் மகன் – அசமஞ்சன்
46. அசமஞ்சனின் மகன் – அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் – திலீபன்
48. திலீபனின் மகன் – பகீரதன்
49. பகீரதனின் மகன் – ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் – நபக்
51. நபக்கின் மகன் – அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் – சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன் – ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் – ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் – சர்வகாமா-1
56. சர்வகாமாவின் மகன் – ஸுதஸ்
57. ஸுதஸின் மகன் – மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன் – சர்வகாமா-2
59. சர்வகாமாவின் மகன் – அனன்ரண்யா-3
60. அனன்ரண்யாவின் மகன் – நிக்னா
61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் – துலிது
63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு-2
65. ரகுவின் மகன் – அஜன்
66. அஜனின் மகன் – தசரதன்
67. தசரதனின் மகன்
68. ஸ்ரீரகு ராமன்

இப்படி 68 பரம்பரை கொண்டது ஸ்ரீராமரின் தலைமுறை

ஆனால், ராம அவதாரம் வந்து தானே அவர்கள் முந்தைய தலைமுறையும் பிந்தைய தலைமுறையும் தெரிகிறது. எனவே, சூரிய குலம் பிரகாசிக்கக் காரணம் ராம அவதாரம் தானே. சூரிய குலத்தை பிரகாசிக்கச் செய்தது ராமன் என்பதால், ராமனை `ராம திவாகரம்’ என்பார்கள். (திவாகரன் என்றால் சூரியன்) எனவே வீட்டில் காலை மாலை விளக்கேற்றி வைக்கும் போது, ராமனைக் குறித்த ஏதேனும் ஒரு ஸ்லோகத்தைச் சொல்வது சிறப்பு. குறைந்த பட்சம் கீழே உள்ள

“ஸ்ரீராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே”

– என்கிற ஸ்லோகத்தையாவது சொல்லுங்கள்.

தொகுப்பு: தேஜஸ்வி

The post விளக்கு வைக்கும் போது இந்த இரண்டு வரி ஸ்லோகத்தைச் சொல்லுங்கள் appeared first on Dinakaran.

Tags : Periyavachan Pillai ,Alvar ,Rama ,
× RELATED நீண்ட ஆயுளோடு நிறைவான வாழ்க்கை :ஜோதிட ரகசியங்கள்