×

தேனி தபால் கோட்டத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்

தேனி, டிச. 16: தேனி தபால் கோட்டத்தில் பணிபுரியும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் 12 அம்சக் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி நடத்தி வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து, நேற்று தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய கிராமிய தபால் ஊழியர் சங்கம் சார்பில் 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அகிலஇந்திய கிராமிய தபால் ஊழியர் சங்கத்தின் சார்பில், போராட்டத்தின் 4வது நாளான நேற்று தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக ஆர்பபாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் பழனி தலைமை வகித்தார். செயலாளர் தெய்வராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் கணவாமைதீன் வரவேற்றார். இதில், கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை மற்றும் ஓய்வூதியம் உள்பட அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும், கமலேஷ் சந்திரா கமிட்டியின் அனைத்து சாதகமான பரிந்துரைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்,

ஜிஐஎஸ் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், பணிக்கொடை தொகையை இலாகா ஊழியர்களுக்கு இணையாக வழங்க வேண்டும், 180 நாட்கள் வரை விடுப்பை சேமித்து வைத்து பணமாக்கும் வசதியை வழங்க வேண்டும், கிராமிய ஊழியர்கள் மற்றும் இவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும், கிளை அஞ்சலகங்களுக்கு மடிக்கணினி, பிரிண்டர், அதிவேக இணைய சேவை போன்றவற்றை வழங்கி சேவைதரத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், 50 பெண் கிராம அஞ்சலக ஊழியர்ககள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் துணை செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

The post தேனி தபால் கோட்டத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Theni Postal Division ,Theni ,Union government ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்