×

கொட்டாம்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் பனை மரக்கன்றுகள், விதை நடவு பணிகள்: கூடுதல் கலெக்டர் பங்கேற்பு

 

மேலூர் / சோழவந்தான், டிச. 16: கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளில் அரசு சார்பில் பனை விதை நடவு செய்யப்பட்டது. இதேபோல் சோழவந்தான் பகுதியில் நடைபெற்ற பனை மரக்கன்றுகள் நடும் விழாவில், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா கலந்து கொண்டார். மதுரை கலெக்டர் அறிவுரைப்படி, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து செயல்படுத்தும் நீர் நிலை மேலாண்மை திட்டத்தின் கீழ், மண் வளம் காக்கும் பனை விதைகள் நேற்று கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 4 ஊராட்சிகளில் நடவு செய்யப்பட்டன.

இதன்படி மொத்தம் 1300 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. பட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் கொட்டாம்பட்டி யூனியன் பிடிஓக்கள் ஜெயபாலன், செல்லப்பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் தொட்டிச்சி சங்கிலி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தன்னாயிரம், மயில்வண்ணன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் காளை, ஊராட்சி செயலர் சேரலாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல, சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட கரட்டுப்பட்டி கரடு பகுதியில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் சுமார் 44 ஏக்கர் அளவில் உள்ளது.

இதில் பனை மரக்கன்றுகள் நடுவதற்காக சுமார் 25 ஏக்கர் நிலம் சுத்தம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் நேற்று பனை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், ஊராட்சி மன்றத் தலைவர் சுகுமாறன் ஆகியோர் முன்னிலையில், கூடுதல் ஆட்சியரும், திட்ட இயக்குனருமான மோனிகா ராணா, கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய உதவிப் பொறியாளர்கள் மருதம், மாலதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சைமணி, மேற்பார்வையாளர் கருப்பையா, ஊராட்சி செயலர் கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கொட்டாம்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் பனை மரக்கன்றுகள், விதை நடவு பணிகள்: கூடுதல் கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kottampatti, Cholavanthan ,Melur ,Cholavanthan ,Kottampatti ,Dinakaran ,
× RELATED மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!