×

விழுப்புரத்தில் பரபரப்பு: புதிய பேருந்து நிலையத்திற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்; போதை ஆசாமி கைது

 

விழுப்புரம், டிச. 16: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பேருந்து நிலையமாக உள்ளது. தென் மாவட்டங்களை இணைக்கக்கூடிய பேருந்து நிலையமாகவும், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் பேருந்து சேவை கொண்ட முக்கிய பேருந்து நிலையமாக விளங்கி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு புதிய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடித்துவிடும் என்று மர்ம நபர் ஒருவர் அவசர அழைப்பான 100ஐ தொடர்பு கொண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர். தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மூலம் மெட்டல் டிடெக்டர் கருவி, மோப்பநாய் உதவியுடன் நள்ளிரவில் பேருந்து நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

மற்றொரு பக்கம் மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்து அவரை டிராக் செய்தனர். அதில் விழுப்புரம் முத்தோப்பை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் விமல்ராஜ்(38) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது போதையில் இருந்தது தெரிய வந்தது.

அவரிடம் விசாரித்தபோது குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வரும்போது நகர காவல் நிலைய போலீசார் மடக்கி ஆவணங்களை கேட்டதாகவும், வீட்டிற்கு சென்று கொண்டு வருவதாக கூறிய போது வாகனத்தை கொடுக்காததால் ஆத்திரத்தில் குடிபோதையில் நள்ளிரவு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் வெடிகுண்டு சோதனையை நிறுத்திய போலீசார் விமல்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். புதிய பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

The post விழுப்புரத்தில் பரபரப்பு: புதிய பேருந்து நிலையத்திற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்; போதை ஆசாமி கைது appeared first on Dinakaran.

Tags : Pandemonium ,Villupuram ,Villupuram Police ,Dinakaran ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...