×

பர்வதமலை கிரிவல பக்தர்களின் வசதிக்காக முதல்முறையாக வரைபடம் வெளியீடு: அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம்

கலசபாக்கம், டிச.16: தனுர் மாத உற்சவத்தையொட்டி பர்வதமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், பர்வத மலையை கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரம் உள்ள பர்வத மலை மீது சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மல்லிகா அர்ஜூனேஸ்வரர் பிரம்மராம்பிகை அம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் வருகை தருவது வழக்கம். தற்போது அனைத்து தினங்களிலும் பக்தர்களின் வருகை அதிக அளவில் உள்ளது. ஆண்டுதோறும் மார்கழி 1ம் தேதி தனுர் மாத உற்சவம் முன்னிட்டு பக்தர்கள் பர்வதமலையில் கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி, நாளை (17ம் தேதி) பக்தர்கள் கிரிவலம் வர உள்ளனர்.

இதில், கோயில் மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள கரைகண்டேஸ்வரர் கோயிலில் கிரிவலத்தை தொடங்கி கடலாடி, பட்டியந்தல், வேடப்புலி, வடகாளியம்மன் கோயில், வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயில் வழியாக வந்து மீண்டும் கரைகண்டேஸ்வரர் கோயிலில் கிரிவலத்தை முடிப்பர். நாளை விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தைவிட பக்தர்களின் வருகை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில், நேற்று முன்தினம் கலெக்டர் பா.முருகேஷ், எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், எஸ்பி கார்த்திகேயன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு செய்து தர வேண்டிய அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, அடிப்படை வசதிகள் செய்து தருவதில் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி, கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின்விளக்கு, கழிவறை, சுகாதாரம், போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தருவதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக முதல்முறையாக வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது 23 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் எந்த வழியாக கிரிவலம் செல்ல வேண்டும் என்பது குறித்து விவரமாக வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் காலங்களில் கிரிவலம் செல்லும் பாதையில் வரைபடங்கள் வைக்கப்பட உள்ளன. இதற்கிடையில், நேற்று ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், பிடிஓக்கள் சத்தியமூர்த்தி, முருகன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பக்தர்கள் கிரிவலம் வரும் பாதையில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உட்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் சாலையின் இருபுறங்களிலும் முட்புதர்களை அகற்றுதல், குப்பைமேடுகளை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கிரிவலம் வரும் பாதையில் தற்காலிக கழிவறை, டேங்கர் வண்டிகள் மூலம் குடிநீர் சப்ளை உள்ளிட்ட பணிகள் இன்று நடைபெற உள்ளது. பக்தர்களுக்காக அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

The post பர்வதமலை கிரிவல பக்தர்களின் வசதிக்காக முதல்முறையாக வரைபடம் வெளியீடு: அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Parvathamalai ,Kriwala ,Kalasapakkam ,Tanur month festival ,
× RELATED கிரிவலப் பாதையில் உள்ள செடி, கொடி, மரங்களில் திடீரென தீ!