×

மக்களவையில் கலர் குண்டு தாக்குதல் சம்பவம் முக்கிய குற்றவாளி ஜாவுக்கு 7 நாள் போலீஸ் காவல்

புதுடெல்லி: மக்களவையில் கடந்த புதன்கிழமை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் அவைக்குள் குதித்து கலர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதேபோல் நாடாளுமன்ற வாளகத்திலும் 2 பேர் கலர் புகை குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். நாட்டையே உலுக்கியுள்ள இந்த விவகாரத்தில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட தலைமறைவாக இருந்த லலித் ஜா நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.

தாக்குதல் தொடர்பான முக்கிய ஆதாரங்களை ஜா அழித்து விட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து லலித் ஜாவை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவரை 7 நாள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். தாக்குதல் சம்பவம் முடிந்த பிறகு அதன் லலித் ஜா ராஜஸ்தானுக்கு தப்பி சென்று அங்கு நாகுர் என்ற இடத்தில் தன் நண்பர்களுடன் உணவகத்தில் தங்கி உள்ளார். இதுகுறித்து விசாரித்து வந்த காவல்துறையினர், ராஜஸ்தான் சென்று ஜாவின் நண்பர்கள் ராகேஷ், மகேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமும் டெல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

* லலித் ஜாவின் நண்பரிடம் விசாரணை
மக்களவையில் கலர் குண்டு தாக்குதல் சம்பவம் நடந்தவுடனேயே அதுதொடர்பான விடியோவை மேற்கு வங்க கல்லூரி மாணவர் நீலகயா ஐச் ஹலிசகருக்கு லலித் ஜா அனுப்பி உள்ளார். இதையடுத்து ஜாவுடனான தொடர்பு குறித்து ஐச் ஹலிசகரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஹலிசகரின் மொபைல் போனில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் விசாரணைக்கு உதவும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

* ஷூ குண்டு கடத்தியது எப்படி?
அவைக்குள் குதித்து தாக்குதல் நடத்திய சாகர் ஷர்மா, மனோரஞ்சன் இருவரும் தங்களின் ஷூவுக்குள் குண்டுகளை மறைத்து கடத்தி எடுத்து சென்றுள்ளனர். இருவரும் தாங்கள் அணிந்து சென்ற ஸ்போர்ட்ஸ் ஷூவின் ஒருபுறத்தை கிழித்து, அதற்குள் கலர் குண்டுகளை கடத்தி சென்றுள்ளனர். கிழிக்கப்பட்டது தெரியாமல் இருக்க தடிமனான ரப்பர் துண்டுகளால் அதை மறைத்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

The post மக்களவையில் கலர் குண்டு தாக்குதல் சம்பவம் முக்கிய குற்றவாளி ஜாவுக்கு 7 நாள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.

Tags : Jha ,Lok Sabha ,New Delhi ,
× RELATED புதிய எம்.பி.க்களை வரவேற்க தயார்: மக்களவை செயலகம் அறிவிப்பு