×

தீப்தி அபார பந்துவீச்சு: 136 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து: இந்தியா வலுவான முன்னிலை

மும்பை: இந்திய மகளிர் அணியுடனான முதல் டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 136 ரன்னுக்கு சுருண்டது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்திய மகளிர் அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 410 ரன் குவித்து சாதனை படைத்தது. நேற்று நடந்த 2ம் நாள் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சில் 428 ரன் குவித்து ஆல் அவுட்டானது (104.3 ஓவர்). சுபா 69, ஜெமிமா 68, கேப்டன் ஹர்மன்பிரீத் 49, யஸ்டிகா 66, தீப்தி 67, ஸ்நேஹ் ராணா 30 ரன் விளாசினர்.

பூஜா வஸ்த்ராகர் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் பெல், சோபி தலா 3, கிராஸ், பிரன்ட், டீன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 136 ரன்னுக்கு சுருண்டது (35.3 ஓவர்). அதிகபட்சமாக பிரன்ட் 59 ரன் விளாச மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். தீப்தி 5.3 ஓவரில் 4 மெய்டன் உள்பட 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் அள்ளினார். ராணா 2, பூஜா, ரேணுகா தலா 1 விக்கெட் எடுத்தனர்.

292 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 2ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்துள்ளது (42 ஓவர்). ஷபாலி 33, மந்தனா 26, யஸ்டிகா 9, ஜெமிமா 27, தீப்தி 20, ஸ்நேஹ் ராணா (0) விக்கெட்டை இழந்தனர். ஹர்மன்பிரீத் 44 ரன், பூஜா 17 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் டீன் 4, சோபி 2 விக்கெட் வீழ்த்தினர். கைவசம் 4 விக்கெட் இருக்க, இந்தியா 478 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

* இந்திய மகளிர் அணி 2002ல் இங்கிலாந்துக்கு எதிராக 467 ரன் குவித்ததே டெஸ்ட் இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோராக முதல் இடத்தில் உள்ளது. நேற்று இந்தியா முதல் இன்னிங்சில் குவித்த 428 ரன் 2வது இடத்தை பிடித்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக 1986ல் எடுத்த 426 ரன் (9 விக்கெட்) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

* குறைந்த ஓவர்களில் (5.3) அதிக விக்கெட் (5) கைப்பற்றிய வீராங்கனைகள் பட்டியலில் தீப்தி முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவின் கார்கி பானர்ஜி 1985ல் நியூசி.க்கு எதிராக 9.4 ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தி 2வது இடத்தில் உள்ளார்.

The post தீப்தி அபார பந்துவீச்சு: 136 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து: இந்தியா வலுவான முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Deepti ,England ,India ,Mumbai ,India Women ,TY Patil Arena ,Deepthi ,Dinakaran ,
× RELATED பட்லர் தலைமையில் பலமான இங்கிலாந்து