×

பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எந்த தொடர்பும் இல்லை: கைது செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் நடத்திய விசாரணை மூலம் தகவல்

சென்னை: திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிய பிரணவ் ஜூவல்லரி ₹150 கோடி மோசடி வழக்கில், நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. திருச்சியை தலைமையிடமாக கொண்டு ‘பிரணவ் ஜூவல்லரி’ இயங்கி வந்தது. இதன் உரிமையாளர்களாக மதன் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி கார்த்திகா உள்ளனர். பொதுமக்களிடம் நன் மதிப்பை பெற்றதால் மதுரை, ஈரோடு, நாகர்கோவில், கும்பகோணம், சென்னை, புதுச்சேரி ஆகிய 7 இடங்களில் பிரணவ் ஜூவல்லரியின் கிளை தொடங்கப்பட்டது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், மதன் செல்வராஜ், கார்த்திகா ஆகியோர் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்தனர். அதற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் மூலம் விளம்பரமும் செய்தனர். அதனை தொடர்ந்து பிரணவ் ஜூவல்லரி நகைக்கடையின் சேமிப்பு கணக்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ₹10 ஆயிரம் முதல் ₹1 லட்சம் வரை மொத்தம் ₹150 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

பிறகு சேமிப்பு கணக்கில் சேர்ந்த ெபாது மக்களுக்கு சொன்னபடி நகைகள் கொடுக்கமுடியவில்லை. ஒரு கட்டத்தில் பிரணவ் ஜூவல்லரியை மூடிவிட்டு அதன் உரிமையாளர் தம்பதி தலைமறைவாகிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் திருச்சியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, ‘பிரணவ் ஜூவல்லரி’க்கு சொந்தமான கடைகள், அதன் உரிமைளாயர் மதன் செல்வராஜுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றினர். இதற்கிடையே தலைமறைவாக இருந்து வந்த பிரணவ் ஜூவல்லரியின் உரிமையாளர் மதன் செல்வராஜ் கடந்த 7ம் ேததி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். மதன் செல்வராஜ் மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திருச்சியில் நேற்று முன்தினம் அதிகாலை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இரண்டு பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கிற்கும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் நிறுவனத்தின் சேமிப்பு கணக்குகள் குறித்த விளம்பத்தில் மட்டும் தான் அவர் நடித்தார். அதற்கான ஊதியம் அவருக்கு முறைப்படி அளிக்கப்பட்டது. சட்டவிரோதமாக எந்த பணமும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அளிக்கவில்லை என்று மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒன்றிய பாஜ அரசை விமர்சித்து வருவதால், அரசியல் பழிவாங்கும் நோக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பியுள்ளனர். இது பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்களிடம் நடத்திய விசாரணை மூலம் அம்பலமாகியுள்ளது. அமலாக்கத்துறையின் நம்பகத்தன்மையை இது கேள்விக்குறியாக்கியுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

The post பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எந்த தொடர்பும் இல்லை: கைது செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் நடத்திய விசாரணை மூலம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Prakashraj ,Pranav ,Chennai ,Prakash Raj ,Trichy ,Pranav Jewelery ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு