×

எண்ணூர் முகத்துவார ஆற்றில் 4வது நாளாக கச்சா எண்ணெய் அகற்றும் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை: எண்ணூர் முகத்துவார ஆற்றில் கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி 4வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். நெட்டுக்குப்பம் பகுதிக்கு வந்து ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மீனவ பெண்களிடம் கேட்டறிந்தார். அப்போது அவர்கள் கச்சா எண்ணெய் படலத்தால் தங்களது படகு, வலைகள் சேதமாகி உள்ளதாகவும், தங்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அமைச்சரிடம் கோரினர்.

அதற்கு, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். தொடர்ந்து, நிவாரணம் குறித்து தமிழிசை சவுந்தராஜன் பேசியது தொடர்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நான் மரியாதை குறைவாக யாரையும் பேசவில்லை, ஆளுநரின் அப்பாவின் சொத்துகளை கேட்கவில்லை, ஒன்றிய அமைச்சரின் அப்பாவின் சொத்துகளை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் கட்டக்கூடிய வரி பணத்தை தான், பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்காகத்தான் கேட்கிறோம் என்றார்.

இதை தொடர்ந்து திருவொற்றியூர் ஆதிதிராவிடர் காலனி, மாதவரம் புத்தகரம், 29வார்டு பொன்னியம்மன்மேடு ஆகிய இடங்களுக்கு சென்று நிவாரண பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அப்போது அமைச்சர் மெய்யநாதன், கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் சுதர்சனம், கே.பி.சங்கர், மேயர் பிரியா, சென்னை மாவட்ட ஆட்சியர் ரேஷ்மி சித்தார்த் ஜகடே, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி, மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு உள்பட ஏராளமானோர் உடன் சென்றனர்.

The post எண்ணூர் முகத்துவார ஆற்றில் 4வது நாளாக கச்சா எண்ணெய் அகற்றும் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ennore estuary ,Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Dinakaran ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...