×

எண்ணெய் படலத்தை அகற்ற ஒடிசா சிறப்பு வல்லுநர் குழு களம் இறக்கம்: சென்னை ஐஐடியின் ஆய்வு அறிக்கை இன்று அரசிடம் சமர்ப்பிப்பு

கடந்த வாரம் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது, சென்னை மணலியில் உள்ள ஒன்றிய அரசின் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்பட்டது. இக்கழிவுகள் பக்கிங்காம் கால்வாய் வழியாக எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பரப்பில் பரவியது. எண்ணெய் கசிவுகள் தற்போது 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது என பசுமை தீர்ப்பாயத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எண்ணெய் கழிவுகளின் படலம் கடந்த 13ம் தேதி இரவு மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கலந்திருந்தது. மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ள படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் மீது எண்ணெய் கசிவு படிந்ததால், அவற்றை பயன்படுத்தமுடியவில்லை.

மேலும் ஆற்றங்கரையோர பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்ததால் அதோடு வந்த எண்ணெய் கழிவின் படலமும் வீடுகளின் சுவர்களில் படிந்தது. இதனிடையே எண்ணெய் படிந்த பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கச்சா எண்ெணய் நாற்றம் வீசி வருகிறது. இதனால் மீன்கள், பறவைகள் செத்து மிதக்கின்றன. இதனை தொடர்ந்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. முகத்துவாரப் பகுதியில் 120க்கும் மேற்பட்ட பணியாளர்கள் குவளைகள் மூலம் நீரில் மிதந்த எண்ெணய் கழிவுகளை அள்ளி டிரம்களில் ஊற்றி சிபிசிஎல் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். இவ்வாறாக நிரப்பப்படும் ஒரு டிரமுக்கு ரூ.1000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 40 மெட்ரிக் டன் எண்ணெய், 36800 லிட்டர் எண்ணெய் கலந்த தண்ணீர் அகற்றப்பட்டுள்ளது. இதனிடையே எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிக்காக 75 அதிநவீன படகுகள், 4 பொக்லைன்கள், 2 ஆயில் ஸ்கிம்மர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனகவே 40 மெட்ரிக் டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் இன்னும் பாதி எண்ணெய் கூட அகற்றப்பட வில்லை என்பதை டிரோன் மற்றும் செயற்கைகோள் எடுத்த படங்களில் தெரிகிறது. இந்த முறையில் அகற்றினால் மாதக்கணக்கில் அகற்றிக்கொண்ட இருக்க வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க மீனவர்களை கொண்டே எண்ணெய் கழிவுகளை அகற்றும் சிபிசிஎல் நிறுவனம் ஏன் நிறுவன பணியாளர்களை கொண்டு எண்ணெய் கழிவுகளை அகற்றவில்லை என்ற கேள்வி எழுகிறது. எண்ணெய் கழிவுகளை 17ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே எண்ணூர் முகத்துவாரத்தில் உள்ள எண்ணெய் கழிவு பாதிப்புகளை சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். 100 படகுகள், 400 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த விரிவான அறிக்கை தமிழக அரசிடம் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. மேலும் கடல் வரை பரவியுள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு ஒடிசா மாநிலம் பரதீப் நகரத்தில் இருந்து சிறப்பு வல்லுநர் குழுவினர் சென்னை வருகின்றனர்.

அபாயகரமான பாதிப்பு

எண்ணூரில் அபாயகர அளவிற்கு கடல் மாசடைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள கடல் நீரில் 3239 துகள் பில்லியன் பெட்ரோலியம் ஹைட்ரோகார்பன் அளவு அதிகரித்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 3000 மடங்கு அதிகம். மேலும் கால்சியம், மெக்னீசியம், இரும்பு, நைட்ரேட் அளவு நிர்ணயிக்கப்பட்டதை விட மிக அதிகமாக உள்ளது.

The post எண்ணெய் படலத்தை அகற்ற ஒடிசா சிறப்பு வல்லுநர் குழு களம் இறக்கம்: சென்னை ஐஐடியின் ஆய்வு அறிக்கை இன்று அரசிடம் சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.

Tags : Odisha Expert Committee ,IIT ,Chennai ,Govt ,Mikjam ,Union Government ,Petroleum ,Odisha Expert Team ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை...