×

ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாள் சிறை தண்டனை விதிப்பு: எம்.எஸ்.தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சம்மந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். தோனி தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் அனுமதியைப் பெற்றே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு: சம்பத் குமார் போன்றவர்கள் பாரபட்சமான அணுகுமுறை மூலம் நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை குலைக்க நினைத்திருப்பது நீதித்துறை மீது நடத்தப்படும் தாக்குதலாகவே கருத வேண்டும்.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை சட்டத்தின் ஆட்சியை பின்பற்றாமல் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சம்பத்குமார் தான் சுய நினைவுடன்எந்த உள்நோக்கமும் இல்லாமல் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற பதில் மனுவை தாக்கல் செய்ததற்கு எந்த மன்னிப்பையும் கேட்கவில்லை. அவர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சம்பத் குமாருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 நாட்கள் சாதாரண சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேல் முறையீடு செய்வதற்காக தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

The post ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாள் சிறை தண்டனை விதிப்பு: எம்.எஸ்.தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sampath Kumar ,MS Dhoni ,Chennai ,M.S. ,Dhoni ,
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...