×

பொன்னேரியில் கள்ளக்காதலன் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது

பொன்னேரி: பொன்னேரியில் கள்ளக்காதலன் கொலை வழக்கில் நேற்று காலை ஒரு பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, நேற்றிரவு அப்பெண்ணுக்கு உடந்தையாக இருந்த கூலிப்படையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி பிரியா (25). இவருக்கும் பொன்னேரி, பாலாஜி நகரை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (24) என்ற வாலிபருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. ஒரு தனியார் கொரியர் கம்பெனியில் வேலை பார்க்கும் கோபாலகிருஷ்ணன் வேலை விஷயமாக வெளியூருக்கு சென்று வந்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரியா வேறொரு நபருடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்திருக்கிறார். இதுகுறித்து தகவலறிந்ததும் கோபாலகிருஷ்ணன் அடிக்கடி பிரியாவிடம் செல்போனில் பேசி தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். பிரியாவின் கள்ளக்காதலையும் கண்டித்துள்ளார். தன்னை கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து கண்டித்து வந்த ஆத்திரத்தில், அவரை தீர்த்து கட்ட பிரியா முடிவு செய்துள்ளார். இதற்காக சென்னை சேத்துப்பட்டில் கூலிப்படையை சேர்ந்த 4 பேரை நேற்று முன்தினம் பொன்னேரிக்கு பிரியா அழைத்து வந்துள்ளார்.

பின்னர் திருஆயர்பாடி பகுதிக்கு கோபாலகிருஷ்ணனை ஆசைவார்த்தை கூறி பிரியா வரவழைத்து, அங்கு அவரை பிரியா கூலிப்படையை சேர்ந்த 4 பேருடன் சேர்ந்து அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்தனர். அங்கு கோபாலகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று அதிகாலை தலைமறைவான பிரியாவை கைது செய்து, அவருக்கு உடந்தையாக இருந்த கூலிப்படையை சேர்ந்த 4 பேர் குறித்து தீவிரமாக விசாரித்தனர்.

இதற்கிடையே மாவட்ட எஸ்பி சிபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில், பொன்னேரி டிஎஸ்பி கிரியாசக்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பொன்னேரி வடிவேல்முருகன், திருப்பாலைவனம் பலராமன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படையினர் கூலிப்படையினரை பற்றி தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு பொன்னேரி, கிருஷ்ணாபுரத்தில் ஒரு தனியார் கல்லூரி அருகே உள்ள வீட்டில் பதுங்கியிருந்த கூலிப்படையை சேர்ந்த 3 பேரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த கூலிப்படை தலைவன் ஆனந்தன், கூட்டாளிகளான சரத்குமார், அஜித்குமார் ஆகிய 3 பேர் எனத் தெரியவந்தது. மேலும், தலைமறைவாக உள்ள கூட்டாளி வள்ளுவன் குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வலைவீசி தேடி வருகின்றனர்.

The post பொன்னேரியில் கள்ளக்காதலன் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bonneri ,Dinakaran ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி