×

கருப்பை அறுவை சிகிச்சை…

நன்றி குங்குமம் தோழி

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

நாற்பதைக் கடந்த பெரும்பாலான பெண்களுக்கு கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது இன்றைக்கு இயல்பான ஒன்றாகிவிட்டது. அதனால் அது சார்ந்த கேள்விகளுக்கும் விடை அறிய வேண்டியது அவசியம் ஆகிவிட்டது. அவ்வகையில் கருப்பை அகற்றிய பின் என்னென்ன பாதிப்புகள் வரலாம், அதனை எவ்வாறு இயன்முறை மருத்துவம் மூலம் சரி செய்வது, உடற்பயிற்சிகள் ஏன் அத்தனை அவசியம்? என பல கேள்விகளுக்கு இங்கே நாம் விடை அறியலாம்.

கருப்பையை அகற்ற ‘லேப்ராஸ்கோப்பி’ போன்ற பல புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் வந்துவிட்டன. இருப்பினும் அடி வயிற்றை கிழித்து செய்யப்படும் பழைய முறை அறுவை சிகிச்சையையும் நோயின் பாதிப்பு காரணமாக இன்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எந்த வகையான அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் இயன்முறை மருத்துவம் அவசியமாகிறது.

காரணங்கள்…

* கருப்பை புற்றுநோய்.

* கருப்பை வாய் புற்றுநோய்.

* கருப்பையில் வேறு ஏதேனும் கட்டி பாதிப்பு தரக்கூடிய வகையில் வளர்வது.

* கருப்பை உட்புற சுவர் அடர்த்தியாக வளர்வது.

* கருப்பையை பாதிக்கும் வகையில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேறு ஏதேனும் பிரச்னை இருப்பது. உதாரணமாக, சினைப்பையில் புற்றுநோய்.

* ஃபைப்ராய்ட்ஸ் (fibroids) போன்ற கட்டிகளினால் ஏற்படும் தொடர் உதிரப்போக்கு.

* இடுப்புப் பகுதியில் ஏதேனும் தீவிர தொற்று நோய் இருப்பது.

பாதிப்புகள்…

* வயிற்றை அறுத்து செய்யும் சிகிச்சையில் தசைகளையும் கிழிக்க வேண்டும் என்பதால் வயிற்று தசைகள் (Core Muscles) பலவீனமாகும்.

* வயிற்று முன் தசைகள் பலவீனமானால் நாளடைவில் முதுகு வலி வரும் வாய்ப்புகள் அதிகம்.

* அடிவயிற்றில் உள்ள தட்டு போன்ற திசுப்படலம் (pelvic floor muscles) அறுவை சிகிச்சைக்குப் பின் பலவீனமாக இருக்கும். இதனால் பின்னாளில் அவசரமாக சிறுநீர் வெளி வருவது, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, சிரிக்கும் போது சிறுநீர் தன்னையறியாமல் சிந்துவது போன்றவை ஏற்படலாம்.

இயன்முறை மருத்துவம்…

அறுவை சிகிச்சைக்கு பின்

*முதல் ஒரு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால், போதிய ரத்த ஓட்டம் கால்களுக்கு இருப்பதற்கான எளிய உடற்பயிற்சிகள் கற்றுக்கொடுப்பர். இதனால் கால்களுக்கு ஏற்படும் வீக்கம் தடுக்கப்படும்.

*சிகிச்சை முடிந்த எந்த நாளில் எழுந்து நடக்க வேண்டும், எப்படி எழுந்து உட்காருவது போன்ற அறிவுரைகளையும் பரிந்துரைத்து தருவர்.

*ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால், இதயத்தின் தாங்கும் ஆற்றல் (Endurance) குறையலாம். அதாவது, மாடிப்படி ஏறினால் மூச்சு வாங்குவது போன்றவை இருக்கும் என்பதால், மூச்சுப் பயிற்சிகள் பரிந்துரைத்து கற்றும் கொடுப்பர்.

இதனால் ஆற்றல் அதிகரிப்பதோடு நெஞ்சு சளியும் சேராமல் தடுக்கும்.

* வயிற்று தசைகள் பலம் பெறுவதற்கான உடற்பயிற்சிகள் பரிந்துரைப்பர்.

* தொடர்ந்து படுத்திருப்பதால் கால் மற்றும் இடுப்பு தசைகள் ஒரு பக்கம் இறுக்கமாகவும், மறுபக்கத்தில் பலவீனமாகவும் இருக்கும் என்பதால், தசை தளர்வு பயிற்சிகளும், தசை வலிமை பயிற்சிகளும் வழங்கப்படும்.

*அடி வயிற்று தசைகளை (pelvic floor muscles) பலப்படுத்த போதிய உடற்பயிற்சிகள் வழங்குவர்.

* எளிய பயிற்சிகளில் ஆரம்பித்து அடுத்தகட்ட பயிற்சிகளை அவ்வப்போது பரிந்துரைத்து மாற்றி கற்றுக் கொடுப்பர்.

அறுவை சிகிச்சைக்கு முன்

*மேற்கூறிய அனைத்து வகை உடற்பயிற்சிகளையும் அறுவை சிகிச்சை தேதிக்கு முன்னர் போதிய வாரங்கள் இடைவெளி இருந்தால் கற்றுக்கொடுப்பர். இதனால் அறுவை சிகிச்சைக்குப் பின் எளிதில் அதிலிருந்து மீண்டு வரலாம்.

*அவசர நிலையில் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை முடிந்தபின்பே உடற்பயிற்சிகளை மேல் சொன்னவாறு வழங்குவர்.எனவே, சிறுசிறு பாதிப்புகள்தான் பின்னாளில் பல பிரச்னைகளை வழங்கும் என்பதால், ஆரம்பத்திலேயே அதற்கான தீர்வுகளை எடுத்துக்கொண்டால் அறுவை சிகிச்சை முடிந்த பின் மிக எளிதில் மீண்டு வரலாம்.

The post கருப்பை அறுவை சிகிச்சை… appeared first on Dinakaran.

Tags : Gomathi Isaikar Iyenjim ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...