×

உழவாரப் பணியினை உணர்வுபூர்வமாக செய்யும் பெண்கள்!

நன்றி குங்குமம் தோழி

சுத்தம் நம் மனதில் மட்டுமில்லை நாம் வசிக்கும் வீட்டிலும், நம்மை சுற்றி இருக்கும் இடங்களிலும் இருக்க வேண்டும். குறிப்பாக நாம் வழிபடும் தெய்வங்கள் வீற்றிருக்கும் கோயில்
களில் இருக்க வேண்டும். கோயிலுக்கு போனோம் சாமி கும்பிட்டோம் நம் வேலை முடிந்து விட்டது என்று வராமல் உழவாரப் பணி என்ற பெயரில் கோயிலை சுத்தம் செய்யும் பணி என்பது சாதாரணமான வேலை இல்லை. அதை எல்லோராலும் செய்து விட முடியாது. அந்தப் பணியினை பம்பரமாய் சுழன்று நூற்றுக்கணக்கான கோயில்களில் உழவாரப் பணியினை மேற்கொண்டு வருகிறார் அபிராமி.

‘‘நான் இந்த உழவாரப் பணியினை கடந்த 15 வருஷமா செய்து கொண்டு இருக்கேன். கிட்டத்தட்ட 331 கோயில்களில் இந்த பணியினை மேற்கொண்டுள்ளேன். இந்தப் பணிக்காக என்னுடன் 110 பேர் வேலை பார்க்கிறார்கள். அதில் 100 பேர் பெண்கள். நாங்க அனைவரும் இணைந்துதான் இந்த வேலையினை செய்து வருகிறோம். இதற்காக நாங்க எந்த ஒரு வருமானமும் பெறுவதில்லை. கோயிலில் உழவாரப் பணி என்பது மிக புனிதமானது.

அதை நாங்க ரொம்ப அர்ப்பணிப்போடு செயல்படுத்தி வருகிறோம். நாங்க கோயில்களில் இந்த பணிகளை மேற்கொள்வதற்காக இவ்வளவு சம்பளம் வேண்டும் என்றெல்லாம் கேட்கமாட்டோம். சில கோயில்களில் காபி காலை மற்றும் மதிய வேளை உணவினை தருவார்கள். ஒரு சிலர் செய்த வேலைக்கு பணமாக கொடுப்பார்கள். அவர்கள் கொடுப்பதை ஏற்றுக் ெகாள்வோமே தவிர நாங்களாக எதையும் கேட்டு வாங்கிக் கொள்ள மாட்டோம். அதே சமயம் எங்க பணியிலும் நாங்க குறை வைக்காமல் கோயிலை சும்மா பளிச்சுன்னு மாற்றிடுவோம்’’ என்றார் அசால்டாக அபிராமி.

‘‘நான் என் திருமணத்திற்கு முன்பு இருந்தே இந்த பணியில் ஈடுபட்டு வருகிறேன். கல்யாணத்துக்கு பிறகு என் கணவரிடம் சொன்ன போது அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக ‘உன் விருப்பம்.இறை பணிக்கு நான் இடையூறாக இருக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டார். இப்போது அவரும் தான் பார்த்து வந்த வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு என்னோடு உழவாரப் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு கோயிலிலும் உழவாரப்பணி செய்வது எவ்வளவு சவாலான வேலை தெரியுமா? அதிலும் ஒரு பெண்ணாக இருந்து இந்த சமுதாயத்தில் எதையும் சாதிக்க முடியும் என்ற வைராக்கியத்தோடுதான் நான் இந்த வேலையில் ஈடுபட ஆரம்பித்தேன். எப்படியாவது ஆயிரம் கோயில் உழவாரப்பணி செய்து விட வேண்டும் என்பது என் இலக்கு.

உழவாரப் பணி என்பது ஆலயங்களை தூய்மைப்படுத்துவதுதான். பொதுவாக இதனை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்வாங்க. ஆனால் நான் தனி ஆளாக என் குழுவினருடன் சேர்ந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகிறேன். கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் இந்த ஐந்து மாவட்டங்களில் உள்ள கோயில்களில் தான் பெரும்பாலும் நான் என் குழுவினருடன் பணியினை மேற்கொண்டிருக்கேன்.

ஆனால் தற்போது மற்ற இடங்களில் இருந்தும் என்னைத் தொடர்பு கொண்டு தங்களின் கோயில்களில் உழவாரப்பணி செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். ஒரு கோயிலை சீரமைக்க குறைந்தபட்சம் 50 பேர் வேண்டும். நான் வேறு இடங்களுக்கு சென்றால் அனைவருக்குமான செலவினை நான் ஏற்க வேண்டும். என்னுடைய பணியே இது என்பதால், எனக்கு வேறு வருமானம் ஏதும் கிடையாது. அப்படி இருந்தும் சில கோயில்களில் பணி செய்ய என் நகைகளை அடகு வைத்திருக்கிறேன். அவன் என்னை அழைக்கிறான். வேறு நான் என்ன சொல்ல’’ என்று கையை மேல் நோக்கி காட்டி கும்பிட்டார்.

‘‘கோயில் என்பது ஒரு புனிதமான இடம். அதை நாமதான் சுத்தமா வைத்துக் கொள்ளணும். பார்க்கும் இடங்களில் எல்லாம் விபூதி குங்குமத்தை கொட்டி விடுவார்கள். அதேபோல், பிளாஸ்டிக் பேப்பர் மற்றும் தேவையில்லாத பொருட்களை தூக்கி எறிவது என கோவிலை அசுத்தம் செய்யக்கூடாது. நாங்க எல்லாம் உழவாரப்பணி செய்வதால்தான் கோயில்கள் அனைத்தும் இன்றும் சுத்தமாக உள்ளது. நம்ம வீட்டை எப்படி நாம சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ அதே நினைப்பில் தான் தெய்வங்கள் வாழும் இடத்தினையும் பார்க்க வேண்டும்’’ என்றார் ஆதங்கமாய்.
‘‘ஒரு கோயிலில் உழவாரப்பணிக்கு வரச்சொல்லிடுவாங்க. நானும் வரேன்னு சொல்லிடுவேன்.

அதற்கான ஆட்களுக்கு முதலில் பணி இருப்பது குறித்து தெரிவிக்கணும். அதன் பிறகு அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்து செல்ல வேண்டும். அதுவே எனக்கு பெரிய சவாலாக இருக்கும். அதில் ஒரு சிலர் சொன்ன நேரத்திற்கு வரவில்லை என்றாலும் எனக்கு டென்ஷன்தான். நாங்க இதனை வியாபாரமாக செய்வதில்லை. அதனால் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அனைவருக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். சிலர் இதனை வியாபாரமா செய்றாங்க. ஆனா நாங்க அப்படி செய்வதில்லை. இந்த பணியினை உணர்வு பூர்வமாக செய்கிறோம்’’ என்றார் அபிராமி.

தொகுப்பு: கவிதா பாலாஜிகணேஷ்

The post உழவாரப் பணியினை உணர்வுபூர்வமாக செய்யும் பெண்கள்! appeared first on Dinakaran.

Tags : kumkum ,Doshi Cleanliness ,
× RELATED குதிகால் வலி