×

மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை; கேரளாவில் பரவிவரும் புதிய வைரஸால் பாதிப்பில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கேரளாவில் பரவிவரும் புதிய வைரஸால் பாதிப்பில்லை என்று அம்மாநில அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அளித்த அமைச்சர் கூறியதாவது,

சிங்கப்பூர் மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக வைரஸ் பரவி வருகிறது. அந்த வகையில் கேரளாவில் பாதிப்பு 230 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது. கேரளாவில் நேற்றைய தினம் 1104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது சுகாதாரத்துறை இயக்குனர் கேரள சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டனர். அங்கே பரவி கொண்டிருக்கும் தொற்றின் பாதிப்பு குறித்து கேட்டறிந்த போது, கேரளாவில் பரவிவரும் புதிய வைரஸால் பாதிப்பில்லை என்று அம்மாநில அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் சிங்கப்பூரில் உள்ள மருத்துவர்களோடும், அங்குள்ள நண்பர்களோடும் பேசுகையில் அங்கே 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு வந்திருக்கிறது என்ற வகையிலான செய்தியை கேட்டபோது இந்த பாதிப்பு என்பது ஒரு மூன்று, நான்கு நாட்கள் தொண்டைவலி, இருமலோடு சரியாகி விடுகிறது என்ற வகையில் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் புதிய வைரஸால் பாதிப்பில்லை என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. காய்ச்சல் அதிகமுள்ள இடங்களில் ஆர்டிபிசிஆர் சோதனையை அதிகரிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தற்போது எந்த மாதிரியான உருமாற்றம் என ஒரு வாரத்தில் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை; கேரளாவில் பரவிவரும் புதிய வைரஸால் பாதிப்பில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Minister ,M. Subramanian ,Chennai ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...