×

இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா? : இந்தி திணிப்புக்கு எதிராக கவிஞர் வைரமுத்து கேள்வி!

டெல்லி : இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். கோவா தபோலிம் விமான நிலையத்தில், சென்னையை சேர்ந்த பொறியாளர் சர்மிளா ராஜசேகரிடம், இந்தி தெரியாதா என கேட்டு, இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும் என மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் மிரட்டப்பட்டுள்ளார். இதற்கு தமிழக முதல்வர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்துவும் தமிழ் பெண் அவமதிக்கப்பட்டதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர் வெளியிட்டுள்ள பதிவில்,

“இந்தி பேசாதவர்
இந்தியர் இல்லை என்று
அரசமைப்பில் இருக்கிறதா?

இந்தியா என்ற நாடு
இந்தி என்ற
சொல்லடியில்தான் பிறந்ததா?

எல்லா மாநிலங்களிலும்
புழங்குவதற்கு
இந்தி மொழியென்ன
இந்தியக் கரன்சியா?

இந்தி பேசும் மாநிலங்களிலேயே
இந்தி கல்லாதார் எண்ணிக்கை
எவ்வளவு தெரியுமா?

வடநாட்டுச் சகோதரர்கள்
தமிழ்நாட்டுக்குள் வந்தால்
தமிழ் தெரியுமா என்று
தெள்ளு தமிழ் மக்கள்
எள்ளியதுண்டா?

சிறுநாடுகளும்கூட
ஒன்றுக்கு மேற்பட்ட
ஆட்சிமொழிகளால்
இயங்கும்போது
இந்தியாவை
ஓர் ஒற்றை மொழிமட்டும்
கட்டியாள முடியுமா?

22 பட்டியல் மொழிகளும்
ஆட்சிமொழி ஆவதுதான்
வினாத் தொடுத்த காவலர்க்கும்
விடைசொன்ன
தமிழச்சிக்குமான ஒரே தீர்வு” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா? : இந்தி திணிப்புக்கு எதிராக கவிஞர் வைரமுத்து கேள்வி! appeared first on Dinakaran.

Tags : Poet Vairamuthu ,Delhi ,
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...