×

அச்சன்கோவில் ஆராட்டு மஹோற்சவம் ஐயப்பன் திருவாபரண பெட்டி தென்காசிக்கு நாளை வருகை

தென்காசி: அச்சன்கோவிலில் நடைபெறும் ஆராட்டு மஹோற்சவ திருவிழாவை முன்னிட்டு ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி நாளை தென்காசி வழியாக கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை போன்று ஐயப்பனுக்கு கேரளாவில் ஐந்து படை வீடுகள் உள்ளன. இவற்றில் ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, பந்தளம் ஆகியவை சபரிமலைக்கு அடுத்தபடியாக புகழ் பெற்றவையாகும். இதில் ஆரியங்காவு, அச்சன்கோவில் தமிழகத்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளன.

ஆண்டுதோறும் அச்சன்கோவிலில் மார்கழி மாதம் ஆராட்டு மஹோற்சவ திருவிழா தொடங்குவது வழக்கம். மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அச்சன்கோவில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக தங்ககிரீடம், முகம், மார்பு, கைகள், கால்கள், உடல் கவசம் மற்றும் வாள் உள்ளிட்ட ஆபரணங்கள் புனலூர் அரசு கருவூலத்திலிருந்து திருவிழா தொடங்குவதற்கு முதல் நாள் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்படும்.

வைரம் மற்றும் விலை உயர்ந்த முத்துக்களால் செய்யப்பட்டுள்ள இந்த ஆபரணங்கள் கொண்டு வரப்படும் வழியில் செங்கோட்டை, தென்காசி ஆகிய இடங்களில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். இந்த ஆண்டு ஆராட்டு மஹோற்சவ திருவிழாவை முன்னிட்டு திருவாபரண பெட்டி தென்காசிக்கு நாளை கொண்டு செல்லப்படுகிறது. தென்காசி காசிவிசுவநாதர் கோயில் முன்பு மதியம் 1 மணிக்கு ஆபரண பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் (17ம் தேதி) அச்சன்கோவில் ஆராட்டு மஹோற்சவ திருவிழா காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

The post அச்சன்கோவில் ஆராட்டு மஹோற்சவம் ஐயப்பன் திருவாபரண பெட்டி தென்காசிக்கு நாளை வருகை appeared first on Dinakaran.

Tags : Ayyappan Thiruvaparana Petti ,Tenkasi ,Achankovil Aaratu Mahotsavam ,Ayyappan ,Thiruvaparana ,Achankovil Aaratu Mahotsava festival ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...