×

திருவேற்காட்டில் பொதுக்குழு கூட்டம்தேமுதிக பொதுச்செயலாளராகபிரேமலதா விஜயகாந்த் தேர்வு: விஜயகாந்த் காலில் விழுந்து ஆசிபெற்றார்

சென்னை: சென்னையில் நேற்று நடந்த தேமுதிக பொதுக்குழுவில் விஜயகாந்த் பங்கேற்றார். கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த 11ம் தேதி அவர் வீடு திரும்பினார். அடுத்த சில மணி நேரத்திலேயே அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு வரும் 14ம் தேதி நடக்கும், விஜயகாந்த் கலந்துகொள்வார் என்று தேமுதிக தலைமை கழகம் அறிவித்தது.

அதன்படி, தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை திருவேற்காட்டில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக விஜயகாந்த் வந்தார். முகக்கவசம் அணிந்தவாறு மேடைக்கு அழைத்து வரப்பட்ட விஜயகாந்தை பார்த்ததும் தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்து கேப்டன் வாழ்க, கேப்டன் வாழ்க என்று கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து அவருக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பிரேமலதா தேமுதிக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

உடனே அவர், விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார்.பொதுக்குழுவில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் ஒற்றுமையுடனும், முழு வேகத்துடனும் பணியாற்றுவது, கூட்டணி அமைப்பது, தேர்தல் யுத்திகளை வழிவகுப்பதற்கு விஜயகாந்துக்கு முழு அதிகாரம் வழங்குவது, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.15,000, இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். எதிர்காலத்தில் எத்தனை பேரிடர் வந்தாலும் நிறைவான நிரந்தர வடிகால் அமைக்க வேண்டும் என்பது உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேமுதிகவில் இனி விஜயகாந்த் நிறுவன தலைவராக மட்டுமே தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக எம்பிக்கள் டெல்லி செல்வது உறுதி
தேமுதிக பொதுக்குழுவில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “2024ல் தேமுதிக எம்.பி.க்கள் டெல்லிக்கு செல்வது உறுதி. 2026ல் தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி. நான் வெறும் பொதுச்செயலாளர் அல்ல. கட்சியின் வளர்ச்சிக்காக உங்களோடு சேர்ந்து வேலை செய்ய வேலையாளாக நிற்கிறேன். என் கண்ணின் இமைபோல கேப்டனை பார்த்துக்கொள்வேன். அவர் 100 வயது வரை வாழ்வார். அவருக்கு எந்த குறையும் வராது. கேப்டன் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்” என்றார்.

* வாசன், அன்புமணி வாழ்த்து
தேமுதிக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரேமலதா விஜயகாந்துக்கு, தமாகா சார்பில் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவரது இயக்கப் பணியும், மக்கள் பணியும் சிறக்க வாழ்த்துகிறேன். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்ற இறைவனிடம் வேண்டுகிறேன் என அறிக்கையில் குறிப்பட்டுள்ளார். இதுபோல, தேமுதிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்துக்கு பாமக தலைவர் அன்புமணியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post திருவேற்காட்டில் பொதுக்குழு கூட்டம்தேமுதிக பொதுச்செயலாளராகபிரேமலதா விஜயகாந்த் தேர்வு: விஜயகாந்த் காலில் விழுந்து ஆசிபெற்றார் appeared first on Dinakaran.

Tags : Premalatha Vijayakanth ,General Secretary ,Democratic Party ,Tiruvekkad ,Vijayakanth ,Chennai ,DMD general meeting ,Premalatha ,Assembly ,Dinakaran ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...