×

மக்களவையில் கலர் குண்டுடன் அத்துமீறிய விவகாரம்கைதான 4 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு; உபா சட்டத்தின் கீழ் வழக்கு; முக்கிய குற்றவாளிக்கு வலை; விசாரணையில் திடுக் தகவல்கள் அம்பலம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவையில் நேற்று முன்தினம் 2 வாலிபர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்பிக்கள் இருக்கும் பகுதிக்குள் குதித்து கலர் புகை குண்டுகளை வீசி பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக சாகர் சர்மா (26), மனோரஞ்சன் (34), நீலம் தேவி (37), அமோல் ஷிண்டே (25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த குருகிராமைச் சேர்ந்த விக்கி என்கிற விஷால் சர்மாவை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.

கைதான 4 பேரையும் போலீசார் நேற்று டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றவாளிகள் 4 பேரையும் 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர் ஒருவாரம் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.சாகர் சர்மா, மனோரஞ்சன், நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகிய 4 பேர் மீதும் உபா சட்டம் பிரிவு 16 (தீவிரவாத செயல்களுக்கான தண்டனை), 18 (சதி திட்டம் தீட்டுதல்), ஐபிசி பிரிவு 120பி (கிரிமினல் சதி), 452 (அத்துமீறல்), 153 (கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொள்தல்), 186 (அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல்), 353 (அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தாக்குதல் அல்லது குற்றச் செயலில் ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையை பொறுத்த வரையில், இவர்களுக்கு எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. இந்த விவகாரத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் இரு அமைப்புகளின் தொடர்பு குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த 4 பேரும் குருகிராமில் உள்ள விஷால் சர்மா வீட்டில் தங்கியிருந்துள்ளனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் லலித் ஜா. இவர் இன்னும் தலைமறைவாக உள்ளான். இவர்தான், நாடாளுமன்ற வளாகத்தில் களேபரம் நடப்பதற்கு முன்பாக, குற்றவாளிகள் 4 பேரின் செல்போனையும் வாங்கிச் சென்றுள்ளார்.

கடைசியாக லலித் ஜாவின் செல்போன் சிக்னல் டெல்லியிலிருந்து 125 கிமீ தொலைவில் ராஜஸ்தான்-அரியானா எல்லையில் உள்ள நீம்ரானா பகுதியை காட்டுகிறது. இதை வைத்து போலீசார் லலித் ஜாவை தேடி வருகின்றனர்.கொல்கத்தாவை சேர்ந்தவரான லலித் ஜா, ஆசிரியராக பணியாற்றுபவர். பகத் சிங்கின் புரட்சிக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட லலித் ஜா, தேசத்தின் கவனத்தை ஈர்க்க ஏதேனும் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் இத்திட்டத்தின் மூளையாக செயல்பட்டுள்ளார். சாகர், மனோரஞ்சன் ஆகியோருக்கு ஓராண்டுக்கு முன்பே லலித் ஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போதில் இருந்து நாடாளுமன்றத்தில் நுழைய திட்டம் தீட்டி உள்ளனர்.

பின்னர் இத்திட்டத்தில் நீலம், அமோலை சேர்த்துள்ளனர். இவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். பேஸ்புக்கில் பகத் சிங் ரசிகர்கள் பக்கத்திலும் இணைந்துள்ளனர். இவர்கள் நன்கு திட்டமிட்டு, ஒருங்கிணைந்து, துல்லியமாக செயல்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையின் போது, விவசாயிகள் போராட்டம், மணிப்பூர் வன்முறை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளால் அரசை கண்டிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டதாக 4 பேரும் கூறியிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த ஒருவார போலீஸ் காவலில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* பாதுகாப்பு அதிகரிப்பு
மக்களவையில் நேற்று முன்தினம் நடந்த பாதுகாப்பு விதிமீறலைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியிலும் பாதுகாப்பு நேற்று பலப்படுத்தப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் நுழைவாயில் பகுதியான மாகர் திவார் வழியாக எம்பிக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவின் கார் கூட இந்த வழியாக அனுமதிக்கப்படவில்லை. இதனால் முதல்வர் சங்மா காரிலிருந்து இறங்கி சர்துல் திவார் வழியாக நடந்து சென்றார். இதற்கிடையே நாடாளுமன்ற பாதுகாப்பிற்காக புல்லட்ப்ரூப் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு கருவிகள் வாங்கவும், கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் ரூ.35 கோடிக்கு ஒன்றிய பொதுப்பணித் துறை நிர்வாகம் நேற்று டெண்டர் வெளியிட்டுள்ளது.

* 8 போலீசார் சஸ்பெண்ட்
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக டெல்லி காவல் துறையை சேர்ந்த ராம்பால், அரவிந்த், வீர் தாஸ், கணேஷ், அனில், பிரதீப், விமித் மற்றும் நரேந்திரன் ஆகிய 8 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

The post மக்களவையில் கலர் குண்டுடன் அத்துமீறிய விவகாரம்கைதான 4 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு; உபா சட்டத்தின் கீழ் வழக்கு; முக்கிய குற்றவாளிக்கு வலை; விசாரணையில் திடுக் தகவல்கள் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Lalakawa ,Delhi ,UBA ,NEW DELHI ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...