×

கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என கூறியதால் அவமதிக்கப்பட்ட தமிழ் பெண்: திணிப்பதால் கற்கும் ஆசையே போய் விட்டதாக பேட்டி

பானாஜி: கோவா விமான நிலையத்தில், இந்தி தெரியாது என கூறியதால் தமிழ் பெண் அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சென்னையை சேர்ந்த பொறியாளர் சர்மிளா ராஜசேகர், கோவா தபோலிம் விமான நிலையத்தில், இந்தி தெரியாது என கூறியதால் தனக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பேட்டி அளித்தது பரபரப்பாகி உள்ளது. இது குறித்து சர்மிளா கூறியிருப்பதாவது:நான் எனது 3 வயது குழந்தையுடன் சென்னைக்கு திரும்ப கோவா தபோலிம் விமான நிலையத்திற்கு சென்றேன்.

அப்போது, பயணிகளின் பெட்டிகளை சோதனையிடும் இடத்தில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர், எனது பெட்டிக்கான டிரேயை எடுக்குமாறு இந்தியில் கூறினார். எனக்கு இந்தி தெரியாது என்பதால், புரியவில்லை என்று கூறினேன். அதற்கு அந்த அதிகாரி, ‘‘எங்கிருந்து வருகிறீர்கள்?’’ என கேட்டார். அதற்கு நான் தமிழ்நாடு என்றேன்.உடனே அந்த அதிகாரி ஏளனமாக என்னைப் பார்த்தபடி, ‘‘தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது. எனவே தேசிய மொழியான இந்தியை கற்றுக் கொள்ளுங்கள்’’ என்றார். நான், ‘‘இந்தி ஒன்றும் தேசிய மொழி கிடையாது.

இந்தி வெறும் அலுவல் மொழி மட்டுமே’’ என கூறி கூகுளில் அதற்கான ஆதாரத்தையும் காண்பித்தேன். ஆனால் அந்த அதிகாரி ஏற்றுக் கொள்வதாக இல்லை. இதுபோல் அங்கு வந்த தமிழ் மக்கள் பலர் அவமதிக்கப்பட்டதாக என்னிடம் கூறினார்கள். இதனால், அங்கேயே சிஐஎஸ்எப் உயர் அதிகாரிகளிடம் சென்று வாய்மொழியாக புகார் அளித்ததோடு, விமான நிலையில் குறைதீர் அதிகாரிக்கு இமெயில் மூலம் எழுத்துப்பூர்வமாக புகார் அனுப்பினேன்.

நான் என் கணவரிடம், ‘இந்தி கற்றுக் கொண்டால் நல்லதுதானே’ என்று பலமுறை கூறியிருக்கிறேன். ஆனால் இப்படி திணிக்க நினைப்பதால் இந்தியை கற்க வேண்டுமென்ற ஆசையே போய்விட்டது. இவ்வாறு அவர் வேதனையுடன் கூறி உள்ளார். இந்த சம்பவத்திற்கு சமூக ஊடகங்களில் பலதரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

The post கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என கூறியதால் அவமதிக்கப்பட்ட தமிழ் பெண்: திணிப்பதால் கற்கும் ஆசையே போய் விட்டதாக பேட்டி appeared first on Dinakaran.

Tags : Goa airport ,Panaji ,Chennai ,
× RELATED ஜூலை மாதத்திற்குள் 10-15 மாநிலங்களில்...