×

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாதனை ரன் குவிப்பில் இந்திய மகளிர் அணி

நவி மும்பை: இந்தியா- இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் ஆட்டம் நேற்று நவி மும்பையில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய மகளிர் முதலில் களமிறங்கினர்.இந்திய தரப்பில் ஜெமீமா ரோட்ரிக்ஸ், சுபா சதீஷ், ரேணுகா சிங் ஆகியோர் முதல் முறையாக டெஸ்ட் ஆட்டத்தில் அறிமுகமாயினர். தொடக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தானா 17, ஷபாலி வர்மா 19ரன்னில் வெளியேறினர். அதன் பிறகு சுபா சதீஷ், ஜெமீமா ரோட்ரிக்ஸ் இணை 3வது விக்கெட்டுக்கு 115ரன் சேர்த்தனர். கூடவே அரை சதங்களை கடந்த சுபா 69, ஜெமீமா 68ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து இணை சேர்ந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், விக்கெட்கீப்பர் யாஷ்டிகா ஆகியோர் பொறுமை, பொறுப்புடன் விளையாட, அணியின் ஸ்கோரும் 300யை தொட்டது. அரை சதத்தை நெருங்கிய ஹர்மன் 49ரன்னில் ரன் அவுட் ஆனார். இந்த இணை 5வது விக்கெட்டுக்கு 116ரன் குவித்தது. யாஷ்டிகா 66ரன் வெளுத்தார்.பின்னர் 7வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த தீப்தி சர்மா, ஸ்நேகா ராணா ஆகியோர் சிறப்பாக ஆடி 92ரன் விளாசினர். ஸ்நேகா 30ரன்னில் ஆட்டமிழக்க, தீப்தி அரைசதம் அடித்தார். ஆட்டம் 90ஓவருக்கு பிறகும் தொடர்ந்தது.

அதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 94ஓவரில் 7விக்கெட் இழப்புக்கு 410ரன் குவித்தது. இந்திய மகளிர் அணி டெஸ்ட் இன்னிங்சில் குவிக்கும் 3வது அதிகபட்ச ரன் என்ற சாதனையை படைத்தது. களத்தில் உள்ள தீப்தி 60, பூஜா வஸ்ட்ராகர் 4ரன்னுடன் 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளனர். அதனால் இந்த சாதனை ரன் அதிகரிக்கும். இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல், கேத்தி கிராஸ், ஷோபி எக்கல்ஸ்டோன், சார்லி டீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

* சாதனை மகளிர்
இந்திய மகளிர் அணி 2002ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் குவித்த 467ரன்னே அதிகபட்ச டெஸ்ட் இன்னிங்ஸ் ரன்னாக முதல் இடத்தில் உள்ளது. அந்த ஆட்டத்தில் மிதாலி ராஜ் இரட்டைச் சதம் அடித்தார். அடுத்து 2வது இடத்தில் உள்ள 426/9ரன்னுக்கு டிக்ளேர் செய்யப்பட்ட ஸ்கோர் 1986ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக எடுக்கப்பட்டது. இப்போது மீண்டும் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய மகளிர் சாதனை ரன் குவித்து வருகின்றனர்.

The post இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாதனை ரன் குவிப்பில் இந்திய மகளிர் அணி appeared first on Dinakaran.

Tags : England ,Navi Mumbai ,India ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை அரையிறுதி: இந்தியா –...