×

சபரிமலையில் தரிசனம் செய்ய பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று முன்தினம் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர். பரிமலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தினமும் சராசரியாக 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். ஆனால் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, போலீசுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் பக்தர்களை ஒழுங்குபடுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நிலக்கல், பம்பை சன்னிதானம் ஆகிய இடங்களில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இவர்களுக்கு உணவோ, குடிநீரோ கிடைக்காததால் பல மணிநேரம் அவதிப்பட்டனர். மேலும் பம்பை – நிலக்கல் இடையே அரசு பஸ் போக்குவரத்தையும் போலீசார் அடிக்கடி நிறுத்தி வைத்தது பக்தர்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியது. கேரள உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டதால் கடந்த 2 தினங்களாக சபரிமலையில் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது. ஆன்லைன் முன்பதிவும், உடனடி முன்பதிவும் சற்று குறைக்கப்பட்டது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர் பிஸ்கட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 2 நாட்களாக பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நேரம் சற்று குறைந்தது.
ஆனால் இன்னும் நிலைமை முழுவதுமாக சீரடையவில்லை. நேற்று முன்தினமும் பக்தர்கள் வருகை சற்று அதிகமாகவே இருந்தது.

இரவு 11 மணி வரை சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 18ம் படியில் நிமிடத்திற்கு சராசரியாக 65 பேரை மட்டுமே ஏற்ற முடிகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர். பம்பையிலிருந்து சன்னிதானம் செல்லும் வழியில் நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் 6 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பக்தர்களிடம் தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேற்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: சபரிமலை குறித்து வேண்டும் என்றே வதந்திகளை பரப்புகின்றனர். பக்தர்களுக்கு சிரமம் இருப்பதாக அறிந்த உடன் அரசு தலையிட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. தற்போது நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முந்தய ஆண்டுகளிலும் இதுபோல் நெரிசல் இருந்தது. அதை விட கூடுதலாக இப்போது எதுவும் இல்லை. சபரிமலை குறித்து பக்தர்கள் இடைய பீதியை ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

* நீதிமன்றத்தில் 300 புகார்கள்
சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இது குறித்த விசாரணையின்போது சபரிமலையில் உடனடியாக பக்தர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 300 புகார்கள் நீதிமன்றத்தில் வந்துள்ளதாக வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவித்தனர்.

கல் தூண்களை அகற்ற கோரிக்கை
18ம் படியில் பக்தர்களை போலீசார் ஏற்றும் வேகம் குறைவாக இருப்பது தான் நெரிசல் ஏற்பட முக்கிய காரணமாகும். வழக்கமாக சீசன் சமயங்களில் ஒரு நிமிடத்திற்கு 80 பேருக்கு மேல் 18ம் படியில் ஏற்றப்படுவது உண்டு. இப்போது நிமிடத்திற்கு 60 பேரை மட்டுமே ஏற்ற முடிகிறது. இந்த வருடம் பெண்கள், குழந்தைகள் அதிகமாக வருவது தான் இதற்கு காரணம் என்று போலீசார் முதலில் கூறினர். ஆனால் இப்போது 18ம் படி அருகே மேற்கூரை அமைப்பதற்காக கட்டப்பட்டுள்ள கல் தூண்கள்தான் இதற்கு காரணம் என்று போலீசார் கூறுகின்றனர். பக்தர்களை விரைவில் ஏற்ற வேண்டும் என்றால் இந்த கல் தூண்களை அகற்ற வேண்டும் என்று போலீஸ் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post சபரிமலையில் தரிசனம் செய்ய பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Pampai ,Sannithanam ,Sabarimala ,Thiruvananthapuram ,Bombay ,
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்