×

டிக்கெட்டுக்கு காசு தராமல் டிமிக்கி; நாகர்கோவில் அரசு பஸ்சில் போதை ஆசாமி ரகளை : வாகன ஓட்டிகளிடமும் தகராறு

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் போதிய பாதுகாப்பு இன்மையால், தினசரி சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. தனியாக நடந்து செல்வோரிடம் செல்போனை தட்டி பறிப்பது. பெண்களுக்கு பாலியல் தொல்லை. திருட்டு என்று அத்து மீறல்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற அசம்பாவித சம்பங்களை கண்டறியும் வகையில், வடசேரி, அண்ணா பஸ் நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்கள் அனைத்தும் சரியாக வேலை செய்வது இல்லை என்று தெரிகிறது. சில காமிராக்கள் தரையை பார்த்து தொங்கியபடியும் உள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு தடம் எண் 1 புறப்பட்டது. அப்போது பஸ்சில் தலைக்கேறிய போதையில் மர்ம நபர் ஒருவர் ஏறினார். திடீரென மர்ம நபர் ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்துக் கொண்டு இருந்தார்.

பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஸ்டேடியம் அருகே வந்தபோது, டிக்ெகட் கொடுத்து விட்டு கண்டக்டர் காசு கேட்டார். உடனே போதையில் இருந்த மர்ம நபர், என்னிடமே காசு கேட்கிறாயா? நாளை இதே இடத்தில் மறித்து உன்னையும் தாக்குவேன், பஸ்சையும் உடைப்பேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து ஆபாசமாக சரமாரியாக திட்ட தொடங்கினார். இது பஸ்சில் இருந்த பலருக்கும் எரிச்சலை கொடுத்தது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த டிரைவர் பஸ்ைச நிறுத்தினார்.

தொடர்ந்து டிரைவர், கண்டக்டர் ஆகியோர் சேர்ந்து, போதை நபரிடம் டிக்கெட்டை திரும்ப தந்து விட்டு செல்லும்படி கூறினர். ஆனால் டிக்கெட்டை போதை நபர் தர மறுத்துவிட்டார். மாறாக மீண்டும் கண்டக்டரை ஆபாசமாக திட்டி தீர்த்தபடி பஸ்சில் இருந்து இறங்கி விறு விறுவென நடத்து சென்றார். இதனால் வேறுவழியின்றி பஸ்சை டிரைவர் எடுத்து சென்றார். இதற்கிடையே நடந்து சென்ற போதை ஆசாமி, அந்த வழியாக வந்த பைக்கை மறித்தார். தொடர்ந்து பைக்கை ஓட்டி வந்தவர்களிடமும் தகராறில் ஈடுபட்டார். எனவே போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது ரோந்து போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

The post டிக்கெட்டுக்கு காசு தராமல் டிமிக்கி; நாகர்கோவில் அரசு பஸ்சில் போதை ஆசாமி ரகளை : வாகன ஓட்டிகளிடமும் தகராறு appeared first on Dinakaran.

Tags : Dimiki ,Asami Ragale ,Nagarko ,Vadaseri bus station ,
× RELATED நாகர்கோவில் மாநகரில் இன்று முதல் 30 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்