×

பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான்கான் கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவர் இம்ரான்கான். இவருக்கு வயது 71. இவர், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார். முன்னாள் கிரிக்கெட் வீரராகவும் இருந்தார். இம்ரான்கான் தன்னுடைய பதவி காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இஸ்லாமாபாத் ஐகோர்ட் விசாரித்தது. இதில், இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆனால் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசிய விட்டதாக கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.

இந்நிலையில் ‘சிபர்’ வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதையொட்டி இம்ரான்கான், குரேஷி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்தார். எனினும் இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

The post பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான்கான் கைது appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Pakistan embassy ,Islamabad ,Pakistan Tehreek-e-Insaf ,PTI ,Dinakaran ,
× RELATED வீட்டு காவலில் இருந்த இம்ரான்கானின் மனைவி சிறைக்கு மாற்றம்