×

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; 53 பேர் காயம்

கீவ்: உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் 53 பேர் காயமடைந்தனர். தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கருதுகிறது. இருந்தாலும், உக்ரைனின் தற்போதைய அரசு இணைய ஆர்வம் காட்டி வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி படையெடுத்தது. இந்த போரில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனை சேர்ந்த 4 பிரதேசங்களின் கணிசமான பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது.

அந்த பிரதேசங்களின் எஞ்சிய பகுதிகளை கைப்பற்றுவதற்காக ரஷ்யாவும், இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும் போரிட்டு வருகின்றன. எனினும், கடுமையான பனிக் காலம் என்பதால் அண்மை காலமாக இரு தரப்பு படையினரும் முன்னேறி செல்ல முடியாத நிலை உள்ளது. தொலைதூரத்தில் இருந்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவதன் மூலமே போரை முன்னெடுத்து செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் 53 பேர் காயமடைந்தனர். போரில் தங்களுக்கான சர்வதேச உதவிகளை அதிகரிக்க வலியுறுத்தி வடக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி சுற்றுப்பயணம் தொடங்கியுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில், கீவ் மீது ரஷ்ய படையினா் ‘பலிஸ்டிக்’ ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 8 சிறுவர்கள் உள்பட 53 பேர் காயமடைந்தனர்’ என்றனர். இதற்கிடையே, உக்ரைன் விமான படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கீவ் நகரை நோக்கி 10 ஏவுகணைகளை ரஷ்யா வீசியதாகவும், அவை அனைத்தையும் உக்ரைனின் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; 53 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Russia ,missile attack ,Ukraine ,Kiev ,NATO ,attack ,Dinakaran ,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...