×

பாதுகாப்பு குறைபாடு விவகாரம் : மக்களவை பாதுகாவலர்கள் 7 பேர் சஸ்பெண்ட்; அமித்ஷா பதவி விலக எதிர்க்கட்சிகள் முழக்கம்!!

புதுடெல்லி: பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் மக்களவை பாதுகாவலர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இது வரும் 22ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில், . பிற்பகல் 1 மணி அளவில் மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, மேற்கு வங்க பாஜ எம்பி காஜன் முர்மு அவையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 பேர் எம்பிக்கள் அமர்ந்திருக்கும் அவை அரங்கிற்குள் மேலே இருந்து குதித்தனர். இரு நபர்களும் அவர்கள் வைத்திருந்த வண்ண புகை குண்டுகளை அழுத்தியதில், அவை முழுவதும் மஞ்சள் நிற புகை சூழ்ந்தது. இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இந்த சம்பவத்தில்5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மைசூரு பாஜ எம்பி பிரதாப் சிம்ஹாவிடம் பெற்ற பாஸ் மூலம், அந்த 2 நபர்கள் மக்களவைக்குள் பார்வையாளர்களாக வந்து இந்த பயங்கரத்தை நிகழ்த்தி உள்ளனர். இது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பதை காட்டுவதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் மக்களவை பாதுகாவலர்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டது. மேலும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஷூக்களில் வண்ணக்குப்பிகளை இளைஞர்கள் நேற்று மறைத்து எடுத்து வந்ததை அடுத்து இன்று எம்பிக்களின் காலணிகள் சோதனை செய்யப்பட்டது. இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடிக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி முழக்கமிட்டனர். இதனிடையே பாதுகாப்பு குறைபாடு பிரச்னையை அரசியலாக்காமல் அனைவரும் ஒன்றுபட்டு இதை அணுக வேண்டும். ஒற்றுமையாக கண்டிக்க வேண்டும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் விளக்கம் அளித்தார். அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுப்பு தெரிவித்து, அமித்ஷா விளக்கமளிக்க வலியுறுத்தி சபாநாயகரை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்டனர். சபாநாயகர் பலமுறை கேட்டுக் கொண்டும் உறுப்பினர்களின் அமளி நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

The post பாதுகாப்பு குறைபாடு விவகாரம் : மக்களவை பாதுகாவலர்கள் 7 பேர் சஸ்பெண்ட்; அமித்ஷா பதவி விலக எதிர்க்கட்சிகள் முழக்கம்!! appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...