×

சீமான் மீது தரமணி போலீசார் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2018ம் ஆண்டு தரமணியில் நடந்த தமிழர் எழுச்சி கூட்டத்தில் பேசினார். அப்போது, ஈழம், மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களில் நடைபெறும் அரசியல் சூழ்நிலை குறித்தும், நியூட்ரினோ திட்டம், சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் ஆகியவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசினார். இதையடுத்து, இரு பிரிவினர்களுக்கு எதிராக மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக அவர் மீது தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், வக்கீல் எஸ்.சங்கர் ஆகியோர் ஆஜராகி, மே மாதம் நடந்த கூட்டத்தில் பேசியதற்காக ஆகஸ்டு மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரில் கூறப்பட்டது போல எந்த ஒரு மோதலும் நடைபெறவில்லை என்று வாதிட்டனர். இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் சீமான் ஆஜராக விலக்கு அளிக்கப்படுகிறது.
அவர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

The post சீமான் மீது தரமணி போலீசார் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Taramani ,Seeman ,Chennai ,Naam Tamilar Party ,Tamil ,Dinakaran ,
× RELATED மூதாட்டியிடம் நகை பறிப்பு