×

எண்ணூர் முகத்துவாரத்திலிருந்து 30 கி.மீ. கடந்து வந்த எண்ணெய் படலம்: கழிவுகள் 3 அடி ஆழம் வரை தேக்கம் மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு வந்த மக்கள் அச்சம்

சென்னை: எண்ணூர் முகத்துவாரத்திலிருந்து 30 கி.மீ. கடந்து வந்த எண்ணெய் படலத்தால் மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு வந்த மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சென்னை மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து, கடந்த 4ம் தேதி மிக்ஜாங் புயலில் ஏற்பட்ட மழை வெள்ள நீரில் நச்சுத்தன்மை வாய்ந்த எண்ணெய் கழிவுகள் அதிக அளவில் திறந்துவிடப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எண்ணூர் முகத்துவார பகுதியில் மழைநீருடன் எண்ணெய் கலந்ததால் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் கலைஞர் நகர், சரஸ்வதி நகர், ஜோதி நகர், ஜெய் ஹிந்த் நகரில் உள்ள வீடுகளின் சுவர்கள், மின் சாதன பொருட்கள், கட்டில், பீரோ சேதம் அடைந்தது. இந்த ஆயில் படலத்தை அப்புறப்படுத்த முடியாமல் மக்கள் தவித்தனர். மீன்பிடி வலைகள், படகுகள் சேதம் அடைந்தது. நீரில் எண்ணெய் படலம் மிதந்து துர்நாற்றம் வீசி வருகிறது. எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று காலை வந்தனர். எண்ணூர் முகத்துவார பகுதியில் ஆற்றில் படர்ந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றி 100க்கும் மேற்பட்ட பேரல்களில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் கழிவுகள் கலந்ததில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஒரு வாரமாக வறுமையில் சிக்கி தவித்து வருகிறோம். தற்போது சிபிசிஎல் நிறுவனமே எண்ணெய் கழிவுகளை அகற்றினால் ஒரு டிரம்முக்கு ரூ.1000 தருவதாக கூறினார்கள். அதன்படி, ஒரு பேரல், ஒரு ஜக்கு, ஒரு புனல் ஆகியவற்றை கொண்டு எண்ணெய் கழிவை அள்ளி வருகிறோம் என்று மீனவர்கள் தெரிவித்தனர். 75க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் கச்சா எண்ணெய் படலம் அகற்றப்படுகிறது. இதனிடையே முகத்துவார பகுதியில் படர்ந்துள்ள எண்ணெய் கழிவுகள் 3 அடி ஆழம் வரை தேங்கி நிற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து சிபிசிஎல் நிறுவனம் சார்பில், 8 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் உதவியுடன் சிபிசிஎல் நிறுவன ஊழியர்கள் கடல் மற்றும் ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து அதிகமாக ஆயில் கழிவுகள் வெளியேற்றப்பட்டதால் கடல் மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. அதேநேரத்தில் குடியிருப்பு பகுதி, வீடுகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் குடிநீருக்கு கூட மக்கள் கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது. சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதிகளில் படர்ந்த எண்ணெய் கழிவுகள் 30 கிலோ மீட்டர் கடந்து காசிமேடு, மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரை வரை பரவியுள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட கடலோர மீனவ கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கடலின் வெள்ள நீரோட்டம் தெற்கு நோக்கி செல்வதால் இது மேலும் நீலாங்கரை வரை பரவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கடலில் உள்ள உயிரினங்களுக்கு பெரும்பாதிப்பு ஏற்படக்கூடும். மெரினா கடலோர பகுதிகளில் ஆமை, நண்டு, இறால் போன்ற உயிரினங்களில் இனப்பெருக்கங்கள் ஏற்படும். இதன் விளைவாக அவை உயிரிழக்க நேரிடும்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், முகத்துவாரப் பகுதிகளில் தான் இறால், நண்டு, ஆமைகள் இனப்பெருக்கம் செய்யக்கூடும். எண்ணெய் கழிவுகளால் அவைகள் பாதிக்கப்படுள்ளது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு இன்னும் 6 மாதங்கள் ஆகும். ஏனென்றால் முகத்துவார பகுதிகளில் 3 அடி ஆழம் வரை எண்ணெய் கழிவுகள் கலந்துள்ளது. முழுமையாக அகற்றி மீண்டும் பழைய நிலை வர மேலும் பல காலங்கள் ஆகலாம். முகத்துவாரங்களை நம்பியுள்ள மீனவர்களுக்கு பெரிய பாதிப்பு எதிர்காலதிற்கும் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். எண்ணெய் கழிவுகள் படர்ந்திருப்பதை பார்த்து மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு வந்த மக்களும் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

* வடசென்னை டூ மத்திய சென்னை

வடசென்னை எண்ணூரில் திறந்துவிடப்பட்ட எண்ணெய் கழிவுகள் படிப்படியாக கடலில் படர்ந்து காசிமேடு, மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட மத்திய சென்னை கடற்கரை வரை 30 கி.மீ. தூரம் பரவியுள்ளது. மேலும் இது நீலாங்கரை வரை செல்லக்கூடிய சூழல் இருப்பதால் ஒட்டுமொத்தமாக சென்னையை சுற்றியுள்ள அனைத்து கடற்கரைக்கும் பரவும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

* சவாலான பணி

எண்ணெய் கழிவுகளை உறிஞ்சும் அட்டையை கொண்டு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் இது சவாலாக இருப்பதால் முழுமையாக அகற்ற முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. நவீன இயந்திரங்கள் மூலம் கழிவுகளை கடலில் இருந்து உறிஞ்சி எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஒரு வாரத்துக்கு மேலாக எண்ணெய் கழிவுகள் முகத்துவாரம் ஆறு, கடலில் மிதப்பதால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் \\”விரைவில் எண்ணெய் படலத்தை அகற்றி விடுவோம்’’ என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

* 3 உறிஞ்சும் வாகனங்கள்

முகத்துவார பகுதியில் மிதக்கும் எண்ணெய் படலத்தை அகற்றுவதற்காக உயர்திறன் கொண்ட 3 எண்ணெய் உறிஞ்சும் வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. பிற பகுதிகளிலிருந்து மிதவை தடுப்புகள் கொண்டுவரப்பட்டு 750 மீட்டருக்கு தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. இதனால் கடலின் பிற பகுதிகளுக்கு எண்ணெய் பரவுவது தடுக்கப்படும். மேலும் எண்ணெய் படலத்தை அகற்றுவதற்காக தூய்மை பணிகளை மேற்கொள்ளும் முகமை மூலம் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

* நீர்நிலை வரம்புகளில் பரவவில்லை

திருவள்ளூர் மாவட்ட நீர்நிலை வரம்புகளில் எண்ணெய் கழிவுகள் படரவில்லை. திருவள்ளூர் மாவட்ட நீர்நிலைகளிலிருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

The post எண்ணூர் முகத்துவாரத்திலிருந்து 30 கி.மீ. கடந்து வந்த எண்ணெய் படலம்: கழிவுகள் 3 அடி ஆழம் வரை தேக்கம் மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு வந்த மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Ennore Estuary ,Thekkam Marina, ,Pattinpakkam beach ,Chennai ,Ennore ,Marina, ,Ennore mouth ,Dinakaran ,
× RELATED எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 2301...