×

பிச்சாட்டூர் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்: புதுப்பாளையம் தரைப்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்

ஊத்துக்கோட்டை, டிச. 14: நீர் வரத்து குறைந்ததால் பிச்சாட்டூர் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. புதுப்பாளையம் ஆரணியாற்றின் தரைப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது. மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியில் கடந்த 4ம் தேதி காலை 9.30 மணியளவில் 500 கன அடியாகவும், 5ம் தேதி 3000 கன அடியாகவும் உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர் அன்று நள்ளிரவு 11 மணிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டது. இதனால் ஊத்துக்கோட்டை கொய்யாதோப்பு, அனந்தேரி, சிட்ரபாக்கம், தாராட்சி காலனி, பனப்பாக்கம், குமரப்பேட்டை, ராள்ளபாடி, ஆரணி உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. மேலும் புதுப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது. பின்னர் மறுநாள் காலை 6 மணிக்கு மேல் 7500 கன அடியாக குறைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிச்சாட்டூர் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் ஆரணியாற்றில் தண்ணீர் குறைந்தது. பிச்சாட்டூர் ஏரியில் தண்ணீர் நிறுத்தப்பட்டாலும், நந்தனம் மலைப்பகுதியில் இருந்து ஆரணியாற்றுக்கு வரும் தண்ணீரால் பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் தரைப்பாலத்தில் தண்ணீர் செல்கிறது. மேலும் 10 நாட்களுக்கு பிறகு தற்போது புதுப்பாளையம் ஆரணியாற்றின் தரைப்பாலத்தில் தண்ணீர் குறைந்ததால் போக்குவரத்து தொடங்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, பிச்சாட்டூர் ஏரியில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டாலும் நந்தனம் மலைப்பகுதி தண்ணீர் ஆற்றில் கலக்கிறது. இதனால் புதுப்பாளையம் ஆரணியாற்றின் தரைப்பாலம் மூழ்கி 10 நாட்களுக்கு பிறகு தற்போதுதான் தண்ணீர் குறைந்துள்ளது. ஆனால் 10 நாட்களாக தண்ணீர் செல்வதால் பாலத்தின் மீது பாசி படர்ந்துள்ளது. இதில் சிலர் வழுக்கி விழுகிறார்கள். எனவே விரைவாக உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என கூறினர்.

The post பிச்சாட்டூர் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்: புதுப்பாளையம் தரைப்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Pichatur Lake ,Pudupalayam ,Uthukottai ,Bichatur lake ,Dinakaran ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...